முருகனுக்கு ரொம்ப பிடிக்கும் நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படையில் ஒரு சுவையான தகவல் உள்ளது. ஒரு பாடலில், திருவாவினன்குடி என்னும் பழநிக்கு வரும் முனிவர்கள் மரவுரியையும், மான்தோலையும் உடுத்திக் கொண்டு வருகிறார்கள். அவர்களில் பலர் முனிவர்கள். பலநாள் பட்டினி விரதம் இருந்து வந்ததால், அவர்கள் மிகவும் ஒல்லியாகி நரம்பும் எலும்பும் நன்றாகத் தெரிகின்றன. அவர்கள் எல்லாருமே கல்வியில் கரை கண்டவர்கள். கோபமே அவர்களுக்கு வராது. உள்ளத் தூய்மை உடையவர்கள். முனிவர்கள் மட்டுமல்ல! பழநிக்கு செல்லும் பக்தர்கள் எல்லாருமே உடல் இளைத்து ஒழுக்கம் குறையாமல் செல்ல வேண்டும் என்ற விதி இருக்கிறது. உணவு குறையும் போது உள்ளம் கடவுளிடம் ஒன்றி விடும் என்பதே இந்த விதி உணர்த்தும் கருத்து.