பதிவு செய்த நாள்
23
ஜன
2016
12:01
கடலுார்: வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், தைப்பூச ஜோதி தரிசன விழா, கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. கடலுார் மாவட்டம், வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இங்கு, 145வது தைப்பூச ஜோதி தரிசன விழா, நாளை 24ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கடந்த ஏழு நாட்களாக, தருமச்சாலையில் மகாமந்திரம் ஓதுதல், ஞான சபையில் திருஅருட்பா முற்றோதல் நடந்து வருகிறது.தருமச்சாலை, வள்ளலார் பிறந்த மருதுார், வள்ளலார் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி ஆகிய இடங்களில், அந்தந்த பகுதி மக்களால் இன்று கொடியேற்றப்படுகிறது. காலை 10:00 மணிக்கு, பார்வதிபுரம் கிராமவாசிகள் சார்பில், ஞானசபையில் சன்மார்க்கக் கொடியேற்றப்படுகிறது.
முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசனம், நாளை காலை 6:00 மணி, 10:00, பகல் 1:00, மாலை 7:00, இரவு 10:00 மற்றும் 25ம் தேதி காலை 5:30 மணி என ஆறுகாலங்களில், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகள் குறித்து, கடலுார் கலெக்டர் சுரேஷ்குமார், எஸ்.பி., விஜயக்குமார், டி.ஆர்.ஓ., விஜயா ஆகியோர் ஆய்வு செய்தனர். அன்னதானம் நடக்கும் இடங்களில் குவியும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவது, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பிற்கு கேமராக்களை பொறுத்துவது, வாகனத்தில் அன்னதானம் வழங்க வருபவர்களை ஒரே இடத்தில் வழங்க செய்வது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை கண்காணித்து தடை செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டார். மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், கூடுதல் போலீசாரை, பாதுகாப்பு பணிக்கு அமர்த்தவும், கலெக்டர் உத்தரவிட்டார்.