பதிவு செய்த நாள்
23
ஜன
2016
04:01
பாலூட்டி இனத்தைச் சேர்ந்த தாவர உண்ணி குதிரை. கி.மு. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால், சமூக வாழ்க்கைக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு விலங்கு. இருபதாம் நூற்றாண்டு வரை மனிதனின் போக்குவரத்துக்கும் மேற்கத்திய நாடுகளில் வேளாண்மையில் ஏர் உழுவதற்கும் உதவியாக இருந்துள்ளது. பண்டைய மன்னர்களின் போர்ப்படைகளில் குதிரைப்படை மிகவும் இன்றியமையாத ஒன்று. குதிரைகள் மிக வேகமாக ஓட வல்லவை. நின்று கொண்டேயும் தூங்க வல்லவை.
ஒரு நாளைக்கு நாற்பது லிட்டர் முதல் நாற்பத்தைந்து லிட்டர் வரை குடிநீர் அதற்குத் தேவை. பிறந்த சிறிது நேரத்திலேயே குதிரைக் குட்டிகள் எழுந்து நடக்கத் தொடங்கி விடும். குதிரையின் சராசரி ஆயுள் முப்பது ஆண்டுகள் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைய பெல்லி எனும் ஒரு குதிரை 62 வயது வரை வாழ்ந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு தனது 56 வது வயதில் உயிரிழந்த, சுகர் பஃப் எனும் குதிரையே உலகில் வயதான குதிரையாக உலக சாதனைப் புத்தகத்தில் பதிவாகியுள்ளது. குதிரை வலிமையின் சின்னம். நாம் பயன்படுத்தி வரும் மின்சார சக்தியினை ஹார்ஸ் பவர் என்றே குறிப்பிடுகின்றனர். குதிரை என்றவுடன் மாவீரன் அலெக்சாண்டரும், ராஜா தேசிங்கும், அசோகரும் நம் நினைவில் வந்து போகின்றனர். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலின் நாயகன் வந்தியத்தேவன் ஏறி வந்த குதிரையின் காலடி ஓசையும், சிவகாமியின் சபதத்தில் நரசிம்ம பல்லவரின் குதிரைக் காலடி ஓசையும் மறக்க முடியாதவை.
கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியின் குருவாக வணங்கப்படும் ஹயக்ரீவப் பெருமாள், குதிரை முகமுடையவராகவே வணங்கப்படுகிறார். திருவிழா காலங்களில் இறைவனும் - இறைவியும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தாலும், அதே இறைவனும் - இறைவியும் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வரும்போது பேரழகும், தனித்ததொரு கம்பீரமும் கூடவே இணைந்து விடுகின்றன. தற்போதும் பல திருத்தலங்களில் பெருந்திருவிழாக்களின், தொடர் உற்சவங்களின் போது சுவாமியோ அம்பாளோ குதிரை வாகன வீதியுலா என்றால் அன்றைக்கு பக்தர்களின் பெருங்கூட்டம் திரண்டு விடுகிறது.
சைவ - வைணவ கோயில்களில் முக்கிய திருவிழாவின் முதல் நாளிலோ அல்லது அதற்கு அடுத்த நாளிலோ குதிரை வாகன உலா கட்டாயமாக இடம் பெற்றிருக்கிறது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி. சித்திரைத் தேருக்கு முதல் நாள் இரவு மாரியம்மன் குதிரை வாகனத்தில்தான் பவனி வருகிறாள். ஸ்ரீரங்கத்தில் தைத்தேர், பங்குனித்தேர், சித்திரைத்தேர் என வரிசையாக மூன்று திருத்தேர் திருவிழாக்கள். இதில் சித்திரைத் தேர் மிகப் பிரபலம். ஸ்ரீரங்கம் நம் பெருமாள் திருத்தேர்களில் எழுந்தருள்வதற்கு முதல் நாள், குதிரை வாகனத்தில்தான் பவனி வருகிறார். வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் வேடுபறி திருநாள் அன்று கோயில் மணல் வெளியில், குதிரை வாகனத்தின் மீதான நம்பெருமாள் வேக வேகமாக அசைந்தாடி வருவது கண் கொள்ளாக் காட்சி. மதுரை சித்திரைப் பெருவிழாவின்போது தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவது மிக முக்கிய திருவிழா ஆகும்.