பதிவு செய்த நாள்
25
ஜன
2016
11:01
விருத்தாசலம்: முதனை செம்புலிங்க அய்யனார் கோவில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழாவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். விருத்தாசலம் அடுத்த முதனை செம்புலிங்க அய்யனார் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி உற்சவம் கடந்த 15ம் தேதி பிற்பகல் 1:30 மணியளவில் செம்புலிங்க அய்யனாருக்கும், மாலை 5:00 மணியளவில் முதுகுன்றீஸ்வரர் சன்னதியில் கொடியேற்றி, காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 8:00 மணியளவில் பெரியநாயகி, முதுகுன்றீஸ்வரர், பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள், செம்புலிங்க அய்யனார் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று தீர்த்தவாரி உற்சவத்தையொட்டி, காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 9:30 மணிக்கு மேல் விருத்தாசலம் மணிமுக்தாற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல், பெரியநாயகி, முதுகுன்றீஸ்வரர், பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள், செம்புலிங்க அய்யனார் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, மாலை 4:00 மணியளவில் சித்தர் ஏரியில் வேல் முழுகும் ஐதீக நிகழ்ச்சி, தீர்த்தவாரி நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று சண்டிகேஸ்வரர் உற்சவம், நாளை மஞ்சள் நீர் உற்சவத்துடன் தீர்த்தவாரி உற்சவம் முடிகிறது.