பதிவு செய்த நாள்
25
ஜன
2016
12:01
சித்தர்கள் வாழ்ந்த புனித பூமி என்ற பெருமையை புதுச்சேரி பெற்றுள்ளது. இங்குள்ள சித்தர்களின் ஜீவ சமாதி ஆலயங்கள் இன்றைக்கும் சித்தர்களின் வரலாறுகளை பறைசாற்றுகின்றன. கூடுவிட்டு கூடு பாய்வது, செம்பை பொன்னாக்குவது, தண்ணீரில் நடப்பது, ஆகாயத்தில் பறப்பது, ஆறடி உயர ஸ்துால உடலை அணு போல் சிறிதாக்குவது, அணு போன்றதை மலைபோல் பெரிதாக்குவது என சித்தர்களின் சாகசங்களை அடுக்கி கொண்டே போகலாம். இவ்வாறு பல பெருமைகளை கொண்ட சித்தர்களில் ஒருவர் தான் குரு சித்தானந்த சுவாமி. இவருக்கு, புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் தனி சன்னதி அமைத்து வழிபடுவதும், ராஜகோபுரங்கள், கோவில் திருக் குளம் இருப்பது வேறெங்கும் காண முடியாத தனிச் சிறப்பாகும்.
வரும் 29ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ள ஆலயத்தில், புதிதாக அமைத்துள்ள மண்டபம், மூலவர் சன்னதி, தியான மண்டபம் உள்ளிட்ட கோவில் பிரகாரம் என, அனைத்து இடங்களிலும், ஓட்டுமொத்த சித்தர்களின் உருவங்கள், சுதை வடிவமாக அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 108 சிலைகளை, தத்ரூபமாக உருவாக்கி இருப்பதை காணும் போது, சித்தர்களின் கலைக்கூடமாக குரு சித்தானந்தா கோவில் அமைந்துள்ளது என்றே கூறலாம். கோவில் பிரகாரத்தில், நாயன்மார்கள், ராமலிங்க அடிகளார், கிருபானந்த வாரியார் சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளன. மேற்கு ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் நுழையும் போது, மண்டபத்தின் மேற்புறத்தில், நான்கு திசையில் இருந்தும் பார்க்கும் போதும் ஒரே மாதிரியாக தோன்றும் என் திசை லிங்கம் அடுத்து, ஒரு திசையில் இருந்து பார்க்கும் போது, காளை உருவமும், மறு திசையில் யானை உருவமும் தெரியும் வகையில் ரிஷப குஞ்ஜதம் அடுத்து குரு தட்சண கணபதி என, ஆச்சரியமூட்டும் வகையில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.