பதிவு செய்த நாள்
25
ஜன
2016
12:01
தேனி : தைப்பூச திருவிழாவையொட்டி, தேனி வீரப்ப அய்யனார் கோயிலில் உள்ள முருகனுக்கு காலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரம் முடிந்து அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை முதல் மாலை வரை தேனி அதன் சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். தேனி பெரியகுளம் ரோட்டில் வேல்முருகன் கோயிலில் தைப்பூச விழாயொட்டி முருகனுக்கு பால், சந்தனம், விபூதி அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் பெற்றனர்.
கம்பம்: ராயப்பன்பட்டி சண்முகாநதி அணை சண்முகநாதன் கோயிலில் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது. பாலமுருகன் விக்கிரகத்திற்கு பல்வேறு சிறப்புஅலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. இங்கு எழுந்தருளியுள்ள ஐயப்பன், விநாயகர், கருப்பசாமி விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் சண்முகாநதியில் நீராடி தைப்பூச நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பாலமுருகன் விக்கிரகத்திற்கு நெய், பால், தயிர், இளநீர், திருநீர், பழச்சாறு உள்ளிட்ட 13 வகை பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் டில்லி ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் உறுப்பினர் முருகேசன், தமிழ்நாடு தேசியபாதுகாப்பு சட்டம் மற்றும் குண்டாஸ் அப்பீல் கமிட்டியின் உறுப்பினர் ரகுபதி, கலெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் பங்கேற்று அன்னதானத்தை துவக்கி வைத்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* வேலப்பர் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு விதவிதமான அலங்காரங்களில் முருகன் விக்கிரகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிறப்பு பூஜைகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகனை தரிசனம் செய்தனர்.
உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன் சன்னதியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகனை தரிசனம் செய்தனர்.
* குமுளி மலைப்பாதையில் உள்ள வழிவிடும் முருகன் கோயிலில் தைப்பூச விழாகொண்டாடப்பட்டது. முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கூடலூர், கம்பம், கே.கே.பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக வந்து வழிபட்டனர்.
*கூடலூர் கூடல் சுந்தரவேலவர் திருக்கோயிலில் தைப்பூச விழா நடந்தது. சுந்தரவேலவருக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சுருளிமலை-பழநி மலை பாதயாத்திரை பெண்கள் குழுவினர் பஜனை பாடல்கள் பாடினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* போடி சுப்பிரமணியர் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜை,அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அலங்காரத்தினை சோமஸ் கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* மூணாறில் பிரணவ சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பழனி தண்டாயுதபாணி கோயில் தைப்பூசத் திருவிழா அனைத்து பழனி பாதயாத்திரை குழு சார்பில் நடந்தது. பழைய மூணாறு பார்வதியம்மன் கோயில் இருந்து காவடியுடன்,பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தன. பின்னர் சப்பர ஊர்வலம் தொடங்கியது.உற்சவ மூர்த்தியுடன் கோயில் இருந்து புறப்பட்ட சப்பரம்,ஒயிலாட்டம், கோலாட்டம், தேவராட்டம்,கரகாட்டம், செண்டை மேளம், நையாண்டி மேளம் உள்பட கலை நிகழ்ச்சிகளுடன் பழைய மூணாறு சென்று,நகர் வலத்திற்கு பிறகு, மாலை 5 மணிக்கு மீண்டும் கோயிலை வந்தடைந்தது.பெண்கள் வடம் பிடித்து சப்பரத்தை இழுத்தனர். பார்வதியம்மன் கோயில் அன்னதானம் வழங்கப்பட்டது.
* ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் தைப்பூச விழா நடந்தது. பாலமுருகனுக்கு பால், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உட்பட 16 வகை அபிஷேகங்கள் செய்தனர். மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்தனர். பக்தர்கள் பலரும் கந்த சஷ்டி பாடி முருகனை வழிபட்டனர். கையில் வேல் ஏந்திய நிலையில் பாலமுருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.