பதிவு செய்த நாள்
25
ஜன
2016
12:01
வீரபாண்டி: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க தேரோட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், தைப்பூச திருவிழா கடந்த, ஐந்து நாட்களாக நடந்து வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. மதியம், 3.50 மணிக்கு விநாயகர் மற்றும் சக்திவேல் எழுந்தருளிய தேர் இழுக்கப்பட்டது. தொடர்ந்து, 4.15 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் கந்தசாமி தேரில் எழுந்தருளினார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க, தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேரோட்டத்தை காண காளிப்பட்டி மட்டுமின்றி அருகில் உள்ள சேலம், திருச்செங்கோடு, இடைப்பாடி, ஓமலூர், தாரமங்கலம், சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் மங்கையர்க்கரசி, துணை கமிஷனர் கிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், பரம்பரை அறங்காவலர் சந்திரலேகா ஆகியோர் செய்திருந்தனர்.