பதிவு செய்த நாள்
25
ஜன
2016
12:01
ஓசூர்: ஓசூர் அடுத்த அகரம் முருகன் கோவிலில், நேற்று நடந்த தைப்பூச தேரோட்டத்தில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே, அகரம் முருகன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், நேற்று முன்தினம் தைப்பூச திருவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நேற்று நடந்தது. இதற்காக அதிகாலை, 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து காலை, 11.15 மணியளவில், உற்சவ மூர்த்தியான முருகன், வள்ளி, தெய்வானையுடன் தேருக்குள் எழுந்தருளினார். அங்கு திரண்டிருந்த பக்தர்கள், கிருஷ்ணகிரி எம்.பி., அசோக்குமார், ஒன்றிய குழு தலைவர் புஷ்பா சர்வேஷ், கோவில் செயல் அலுவலர் ராஜரத்தினம் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரின் முன்பு காவடி எடுத்து வந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆடி சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை அடைந்தது. தேரின் முன்பு பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 5 மணியளவில் பரதநாட்டியம், 6.30 மணிக்கு நாதஸ்வர கச்சேரி மற்றும் இரவு, 9 மணிக்கு இன்னிசை கச்சேரி நடந்தது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கோவில் வளாகத்தில், ஐந்து சி.சி.டி.வி., கேமரா மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், எஸ்.ஐ., குணசேகரன் தலைமையில், 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (ஜன. 25) இரவு 10 மணியளவில், முத்து பல்லக்கு உற்சவம் நடக்கிறது.