பதிவு செய்த நாள்
25
ஜன
2016
12:01
உத்திரமேரூர்: நோனாம்பூண்டி கிராமத்தில், நீர்வாழியம்மன் கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேக விழா நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டி அடுத்த, நோனாம்பூண்டி கிராமத்தில், நின்றகோடி நீர்வாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பழுதடைந்திருந்ததை அடுத்து, கிராமத்தினர் சார்பில், சில மாதங்களாக கோவில் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தன. பணி முழுவதுமாக நிறைவடைந்ததை அடுத்து நேற்று, மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி முன்னதாக, கடந்த 22ம் தேதி காலை, 7:00 மணிக்கு, புனித மண் எடுத்தல் நிகழ்ச்சி யும், அதை தொடர்ந்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பிரவேசபலி, அங்குரார்பனம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகளும், மாலையில் முதற்கால கலச விளக்கு வேள்வி பூஜையும் நடந்தன. சனிக்கிழமை காலையில் கோ பூஜை, சுமங்கலி பூஜையை தொடர்ந்து மாலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. நேற்று காலை, 6:00 மணிக்கு மூன்றாம் கால கலச விளக்கு வேள்வி பூஜை மற்றும் அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சி யை தொடர்ந்து, 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.