பதிவு செய்த நாள்
29
ஜன
2016
11:01
தமிழர்கள் வாழ்வின் முக்கிய அங்கம் இசைதான். குழந்தை பிறந்ததும் தாலாட்டு, திருவிழாக்களில் கும்மிப்பாட்டு, உழைக்கும் மக்கள் களைப்பாற நாட்டுப்புற பாட்டு, சாகும் போது ஒப்பாரிப்பாட்டு என, எல்லா நிகழ்வுகளிலும், இசைக்கு தான் பிள்ளையார் சுழி. இசை கேட்டால் புவி அசைந்தாடும்... என்ற வரிகளே, இதற்கு சமர்ப்பணம். கர்நாடக சங்கீதமும், ஆன்மிக நிகழ்வுகளும், சென்னைக்கு அடுத்தப்படியாக, கோவையில் தான் அதிகம் நடக்கின்றன. இங்கு, மார்கழி உற்சவத்தில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்திய, எப்போ வருவாரோ ஆன்மிக நிகழ்ச்சிக்கு, பெருமளவு மக்கள் திரண்டு, இசை மழையில் நனைத்தனர். தவிர, ராமர் கோவில் ஐயப்பா பூஜா சங்கம், பாரதிய வித்யாபவன் சார்பிலும், இசை நிகழ்ச்சிகள் நடத்தியதில், கர்நாடக சங்கீத மழையின் ஒவ்வொரு துளியிலும், சொட்ட சொட்ட நனைந்தனர் இசைப்பிரியர்கள். அதிக இசை கச்சேரிகள் நடக்கும் கோவை யில், சினிமா இசையமைப்பாளர்களின் வருகைக்கும் பஞ்சமில்லை. ஏ.ஆர்.ரஹ்மான், போன்ற, சினிமா உலகின் உச்சத்தை தொட்ட இசையமைப்பாளர்களின் வருகை, கோவை இசை ரசிகர்களை குதுாகலம் அடைய வைத்துள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கோவைக்கென, பிரத்யேக மியூசிக் அகாடமி வருமா என்பது இசை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.