உறுதியோடு பக்தி செய்யவேண்டுமென்பதே ஆன்றோர் நமக்கு விதித்த வாக்கு. பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம், நலியும் நரகமும் நைந்தன; நமனுக்கிங்கு யாதொன்றும் இல்லை. கலியும் கெடும் கண்டுகொண்மின் என்று திருவாய்மொழியில் பாடுகிறார் நம்மாழ்வார். அந்த நம்பிக்கையை நம் உள்ளத்தில் நிலைநிறுத்த வேண்டும். இதற்கு பக்திதான் வழி. இறைவன் நம்மைக் கைவிடமாட்டான் என்று உறுதியாக நம்பிக்கை கொள்வதே பக்தி. நதியினுள் விழுந்த ஒருவன் இரண்டு கைகளையும் உயர்த்தி விடுவதுபோல, சம்ஸார வெள்ளத்தில் விழுந்த ஒவ்வொருவரும் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு அதாவது தன்னிடம் எந்தப் பொறுப்புமின்றி எல்லாவற்றையும் இறைவனுக்கென்று துறந்து விட்டு கடவுளை சரண்புக வேண்டும் என்கிறார் ராமானுஜர்.
இதை பகவத் கீதையில் கண்ணன் சொல்லும்போது, எல்லா ரகசியங்களைவிடவும் மிகப்பெரிய ரகசியமான என் இறுதி வாக்கியத்தை மீண்டுமொருமுறை உனக்கு சொல்லுகிறேன் நீ எனக்குப் பிரியமானவனாதலால் உனக்கு நன்மை சொல்லுகிறேன். எல்லாக் கடமைகளையும் தியாகம் செய்துவிட்டு நீ என்னையே சரண்புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன். துயரப்படாதே என்கிறார். அவ்வாறு தன்னை உறுதியுடன் சரண்புகுபவர்களின் பாவங்களைப் போக்கியருளும் கண்ணன் பல தலங்களிலும் கோயில் கொண்டு அருள்புரிந்து வருகிறான். அதிலொரு கோயில்தான் ராஜஸ்தான் மாநிலம் மந்தாப்பியாவிலுள்ள கண்ணன் கோயில். இங்கே கண்ணனை சாவாலியாஜி என்று அழைக்கிறார்கள். சாவாலியா என்றால் கருமைநிறம் கொண்டவன் என்று பொருள்.
ராஜஸ்தானின் அழகிய நகரமான உதய்பூருக்கும், மாவீரன் ராணா பிரதாப்சிங் ஆண்ட பகுதியான சித்தோர்கார் நகருக்கும் இடையே மந்தாப்பியா உள்ளது. கி.பி. 1840 -ல் இப்பகுதியை ஆண்டுவந்த மேவார்ட் என்ற அரசன் கிராமங்களை இணைக்கும் விதமாக சாலைகள் அமைத்து வந்தான். அப்போது பாங்குடா என்ற கிராமத்தில் ஒரு மரத்தை வெட்டிச் சாய்க்கும்போது வேர்ப்பகுதி இருந்த குழிக்குள் மூன்று கிருஷ்ண விக்ரகங்கள் இருந்தன. அதிலொரு விக்ரகம் அந்த கிராமத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் கட்டப்பட்டது மற்றொன்று பாதுஷோடா என்னுமிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூன்றாவது விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம்தான் இந்த மந்தாப்பியா கோயில்.
போலாராம் என்னும் பக்தரின் கனவில் கண்ணன் தோன்றி, மரத்தின்கீழ் தான் இருப்பதாகவும், எடுத்துக் கோயில் கட்டி வழிபடுமாறு கூறியதாகவும் அதன்பேரில் இந்த விக்ரகங்கள் கிடைத்ததாகவும் மற்றொரு வரலாறு சொல்கிறது. காலப்போக்கில் இந்த மூன்று கோயில்களுமே மிகப்பிரபலமடைந்து விட்டன. கண்ணன் அவதார தினம் நவராத்திரி போன்ற சமயங்களில் மிக பிரம்மாண்டமாக விழா கொண்டாடப்படுகிறது. பல்வேறு கோரிக்கையோடு இந்தியாவில் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இங்கு வருகின்றனர். இப்பகுதியிலுள்ள வியாபாரிகள் புதிதாகத்தொழில் தொடங்கினால் கண்ணனையும் பங்குதாரராக சேர்த்துக்கொள்கிறார்கள். லாபத்தில் ஒரு பகுதியை கண்ணனுக்குச் செலுத்திவிடுகிறார்கள். தங்கள் தொழில் ஸ்தாபனத்தில் உயர்ந்த ஒரு பீடத்தில் கண்ணன் சிலையை வைத்து கண்ணனே அரசன்; நாம் சாதாரணமானவர்கள். எல்லாவற்றையும் அவன் பார்த்துக்கொள்வான் என்ற பாவனையில் தொழில் செய்கிறார்கள்.
இக்கோயில் காலை 5.00 மணி முதல் பகல் 12.00 மணிவரையிலும்; பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 11.00 மணிவரையிலும் திறந்திருக்கும். இதில் இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை சிறப்பாக பஜனைகள் நடக்கும். சென்னை - அகமதாபாத் - உதய்பூர் வழியாக மந்தாப்பியா செல்லலாம். அல்லது சென்னை - மும்பை- உதய்பூர் வழியாகவும் செல்லலாம்.