பதிவு செய்த நாள்
02
பிப்
2016
11:02
ஓசூர்: ஓசூர் அருகே, திம்மசந்திரம் சப்பளம்மா தேவி கோவிலில் மாடுகள் திருவிழா நேற்று துவங்கியது. திருவிழாவிற்கு வந்திருந்த மாடுகளை, கையில் துண்டு போட்டு, விவசாயிகள் விலை பேசி விற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த ஆவலப்பள்ளி அருகே உள்ளது திம்மசந்திரம் சப்பளம்மா தேவி கோவில். இங்கு, 200 வது ஆண்டு மாடுகள் திருவிழா நேற்று துவங்கியது. ஓசூர் எம்.எல்.ஏ., கோபிநாத், மாடுகளுக்கு பூஜை செய்து விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் என, மூன்று மாநிலங்களில் இருந்து வந்திருந்த காளை மற்றும் பசு மாடுகளை வாங்க, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து அதிகளவு வியாபாரிகள் வந்திருந்தனர். எருது விடும் விழாவுக்கு தடை நீடிப்பதால், அதிகளவு காளைகள் விற்பனைக்கு வந்திருந்தன. ஒரு ஜோடி காளை, 1 லட்சத்து, 50 ஆயிரம் வரை விலை பேசி விற்பனை செய்யப்பட்டது. தாங்கள் பேசும் விலை மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக, விவசாயிகள் பலர் கையில் துண்டு போட்டு விலை பேசி முடித்தனர். நேற்று துவங்கிய திருவிழா, வரும், 7 ம் தேதி வரை நடக்கிறது. இந்த ஏழு நாட்களும் மாடுகள் விற்பனை நடக்கும். இதில், 2,000க்கும் மேற்பட்ட காளை மற்றும் பசுமாடுகள் விற்பனையாகும் என, பக்தர்கள் தெரிவித்தனர்.