பதிவு செய்த நாள்
18
ஆக
2011
10:08
சபரிமலை : ஆவணி மாத பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. புதிய தந்திரியாக, கண்டரரு மகேஸ்வரரு பொறுப்பேற்றார். நேற்று பிற்பகல் சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனை பூஜை நடத்தப்பட்டது. கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவில், ஒவ்வொரு மாதமும் மாத பூஜை மற்றும் சிறப்பு பூஜைகளுக்காக திறக்கப்படுவது வழக்கம். ஆவணி மாத பூஜைகளுக்காக கோவில் நடை, நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. அதற்கு சற்று முன்னதாக, கோவிலின் புதிய தந்திரியாக நியமிக்கப்பட்ட கண்டரரு மகேஸ்வரரு, சன்னிதானத்திற்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து தான், மேல்சாந்தி சசி நம்பூதிரி நடையைத் திறந்தார். அதற்குப் பின், சிறப்பு பூஜைகள் எதுவும் நடக்கவில்லை. நேற்று அதிகாலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கின. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டுள்ளனர். நேற்று, சுவாமிக்கு லட்சார்ச்சனை நடந்தது. மேலும், தந்திரி முன்னிலையில், சகஸ்ர கலச பூஜைகள் நடந்து, பிற்பகல் 12 மணிக்கு, கலச நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. வரும் 21ம் தேதி வரை கோவிலில், காலையில் உதயாஸ்தமன பூஜையும், பிற்பகலில் சகஸ்ர கலசாபிஷேகமும், களபாபிஷேகமும் (சந்தன அபிஷேகம்), மாலையில் புஷ்பாபிஷேகம் மற்றும் படி பூஜைகளும் நடைபெறும். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிவடைந்து, வரும் 21ம் தேதி இரவு 10 மணிக்கு, கோவில் நடை அடைக்கப்படும். ஓணம் பண்டிகையை ஒட்டி, கோவில் நடை அடுத்த மாதம் 7ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். அதற்கு மறுநாள், 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை கோவிலில், தினமும் பக்தர்களுக்கு ஓண விருந்து பரிமாற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பூஜை கட்டணம் கிடு கிடு உயர்வு: சபரிமலை அய்யப்பன் கோவில், தரிசன மற்றும் பூஜை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மாற்றி அமைக்கப்பட்ட புதிய கட்டணங்கள் விவரம் (பழைய கட்டணம் அடைப்புக்குறிக்குள்) வருமாறு: கணபதி ஹோமம் ரூ.200 (ரூ.150), காலை (உஷ பூஜை) பூஜை ரூ. 2,500 (ரூ.501), உச்சிக்கால பூஜை ரூ.2,500 (ரூ.2,001), தீபாராதனை ரூ.2,500 (ரூ.2,000), இராக்கால (அத்தாழ) பூஜை ரூ. 2,500 (501), லட்சார்ச்சனை ரூ. 4,000 (ரூ.3,000), களபாபிஷேகம் (சந்தனம்) ரூ.3,000 (ரூ.2,000), அஷ்டாபிஷேகம் ரூ. 2,000 (ரூ.1,500), சகஸ்ரகலசாபிஷேகம் ரூ.25,000 (ரூ.19,000), படி பூஜை ரூ. 50,000(ரூ.30, 001), உதயாஸ்தமன பூஜை ரூ. 30,000 (ரூ.20,001), உற்சவ பலி ரூ. 15,000 (ரூ.5,001), பகவதி சேவை ரூ.1,500 (ரூ.800), புஷ்பாபிஷேகம் ரூ.2,000 (ரூ.1,500), நெய் அபிஷேகம் ரூ.10 (ரூ.5), துலாபாரம் ரூ.100 (ரூ.61). அதேபோல், பிரசாதங்களான, அரவணா ரூ.60 (ரூ.50), அப்பம் ஒரு பாக்கெட் ரூ.25 (ரூ.20) என, உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இலவசமாக இருந்து வந்த நெய் பாயசம் (அரிசி, வெல்லம் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் பொங்கல்) ரூ.15, பஞ்சாமிர்தம் ரூ.50 (ரூ.20), நவக்கிரக பூஜை ரூ.100 (ரூ.61). சுவாமி சன்னிதியில் நின்று சிறப்பு தரிசனம் செய்ய 2,500 ரூபாய் கட்டணம். அதேபோல், காலை, பிற்பகல், இராக்கால பூஜை, ஹரிவராசனம் பாடல் பாடும் நேரம் ஆகியவற்றின் போதும், பக்தர்கள் சன்னிதியில் சுவாமி தரிசனம் செய்ய இதே கட்டணம் செலுத்தவேண்டும். இக்கட்டண உயர்வு சபரிமலை அய்யப்பன் சன்னிதி, மாளிகைப்புறத்தம்மன் சன்னிதி, பம்பை கணபதி கோவில் ஆகிய இடங்களிலும் ஆவணி முதல் தேதி (இன்று )முதல் அமலுக்கு வருகிறது.