பதிவு செய்த நாள்
29
பிப்
2016
10:02
ஆர்.கே.பேட்டை: பொதட்டூர்பேட்டை திரவுபதியம்மன் கோவில், தீமிதி திருவிழாவில், நேற்று, காலை, பதினெட்டாம் நாள் போர் நடந்தது. காலை, 11:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், பதினெட்டாம் போர்க்கள நிகழ்வு, தெருக்கூத்து கலைஞர்களால் நடத்தப்பட்டது. இதில், பீமசேனன், துரியோதணனை கொன்றான். தனது சபதம் நிறைவேறியதால், திரவுபதி விரித்த கூந்தலை நேற்று முடிந்தாள். இந்த நிகழ்வை காண, திரளான பக்தர்கள் அங்கு கூடியிருந்தனர். போரில், தன் மகன் துரியோதனனை இழந்த காந்தாரி, ஆவேசத்துடன் அங்கு கூடியிருந்த பக்தர்களை துடைப்பத்தால், நைய புடைத்தாள். மாலை, 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி, தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.இன்று காலை தருமர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.