பதிவு செய்த நாள்
29
பிப்
2016
10:02
அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசி மக தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது. அரூர் அடுத்த தீர்த்தமலையில் அமைந்துள்ளது தீர்த்தகிரீஸ்வரர் கோவில். சிறப்பு வாய்ந்த இந்த கோவில் மாசி மக தேர் திருவிழா, கடந்த, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 23ம் தேதி சுவாமி திருவீதி உலாவும், 26ம் தேதி திருக்கல்யாணமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விநாயகர், தீர்த்தகீரிஸ்வரர், வடிவாம்பிகை ஆகிய, மூன்று தேர்கள் மீது, முத்துக்கொட்டை, பொறி, மிளகு, உப்பு மற்றும் நவதானியங்களை தூவி வழிபட்டனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, கோயிலைச் சுற்றி வந்து நிலை நிறுத்தினர். இரண்டாவதாக தீர்த்தகீரிஸ்வரர் தேரும், அதற்கடுத்து வடிவாம்பிகை தேரும் இழுத்து வந்து நிலை நிறுத்தப்பட்டது. விழாவில், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு, அரூர் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்கள் கூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரூர் டி.எஸ்.பி., தட்சணாமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.