பதிவு செய்த நாள்
29
பிப்
2016
11:02
திருப்பதி: ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் இருந்து வெளியே வர, புதிய வழியை ஏற்படுத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள, ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவிலுக்குள் செல்லவும், தரிசனம் முடித்து திரும்பி வரவும், கோவில் மகா துவாரத்தை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். ஒரே வழியை பயன்படுத்துவதால், பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் சமயங்களில், கூட்ட நெரிச்சல் ஏற்படுகிறது.இதனால், பக்தர்கள் கோவிலுக்குள் நுழையவும், வெளியே வரவும் தனித்தனி வழி ஏற்படுத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, கோவிலுக்குள் உள்ள, ம்ருத்யுஞ்ஜய சுவாமி சன்னதி பின்புறம் வழியாக, கோவிலில் இருந்து வெளியே வரும் வழியை ஏற்படுத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால், அந்த வழியில், பழங்கால அறை ஒன்று உள்ளது. அந்த அறை வழியாக, வெளியே செல்ல வழி ஏற்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, ஆந்திர அறநிலைய துறை அனுமதி பெற்று, உயர் அதிகாரிகள் முன்னிலையில், பல ஆண்டுகளாக பூட்டி இருந்த, அந்த அறையின் பூட்டை உடைத்து, கதவை திறந்தனர்.
அந்த அறையில் செப்பு, பித்தளையால் செய்யப்பட்ட பழங்கால பொருட்கள், பாத்திரங்கள், இரும்பு பைப், சண்டிகேஸ்வரர் சிலை ஆகியவை இருந்தன. அறையை சுத்தம் செய்து, அதன் ஒருபுற சுவரை உடைத்து, கோவிலை விட்டு வெளியே வரும் வழியை ஏற்படுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.ஓரிரு தினங்களில், மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் துவங்க உள்ளதால், பிரம்மோற்சவம் முடிந்ததும், வௌியே செல்லும் வழி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க, தேவஸ்தானம் திட்டமிட்டு உள்ளது.