பதிவு செய்த நாள்
29
பிப்
2016
04:02
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி என்று பரமனின் வியாபகத் தன்மையை மனங்குளிர்ந்து பாடியிருக்கிறார்கள். பல பெரியோர்கள். இந்தப் பிரபஞ்சத்தில் இறைவனுக்குத் தொடர்பில்லாத எதுவுமே இல்லை என்கின்றன தத்துவங்கள். மறைந்தும், வெளிப்பட்டும் தன்னுடைய லீலைகளை பரமன் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான் என்கின்றன புராணங்கள் அதை நிஜம் என்று உணர்த்துபவராக திகழ்ந்தவண்ணமிருக்கிறார் ஸ்ரீஸ்தம்பேஸ்வரர். ஸ்தம்பம் என்கிற சொல், ஊன்றப்பட்ட, ஸ்தாபிக்கப்பட்ட தூண் என்கிற பொருளிலும் வருகிறது. மாற்றிப் பார்த்தால், வியப்பினால் நம்மை ஸ்தம்பிக்கவும், பிரமிக்கவும் செய்கிறது. அதனால் இரண்டு வகையிலும் பொருத்தமான பெயருடன் தரிசனம் தருகிறார் சிவபிரான் அந்தத் தலம், கவிகாம்போய் குஜராத் மாநிலத்தில் அரபிக் கடலுக்கும் காம்பே முகத்துவாரத்துக்கும் இடையே அமைந்துள்ள பகுதி இது.
இங்குள்ள விசேஷமே இந்தப் பெருமான் தினம் தினம் கடலில் முழ்கி எழுவதுதான். கடல் அலைகள் ஏறுமுகமாக இருக்கும்போது அலைகள் சிறிது சிறிதாகக் கோயிலை மூழ்கடிக்கும். பிறகு கடல்நீர் காலையில் வடியத் தொடங்கும்போது கோயில் வெளியே காட்சி தரும். அமைதியையும், தனிமையையும் விரும்புபவர்களுக்கு இக்கோயில் ஒரு வரப்பிரசாதம். கோயில், சிற்ப வேலைப்பாடுகள் எதுவும் இல்லாமல் சாதாரணமாகக் காட்சி தருகிறது. கோயிலில் உட்கார்ந்து மனம் ஒருமைப்பட தியானப் பயிற்சியில் ஈடுபடலாம். சுற்றிலும் கடல் நீர் சூழ்ந்த அமைதியான சூழலில் மனம் கடவுளிடம் ஒன்றி மனத்துக்கு அமைதி கிட்டும். இக்கோயில் கடலில் மூழ்கி, பின் வெளிப்படுவதைப் பார்க்க இந்தியாவின் பல பாங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோயிலிலிருந்து சற்று தொலைவிலுள்ள நகரத்தில் சிற்றுண்டி சாலைகளும், தங்குவதற்கு வசதியும் உள்ளன. இரவுப் பொழுது நெருங்க நெருங்க, பகலில் சிவபெருமானுக்குச் சாற்றிய மலர்கள் கடல் நீரில் மிதந்து வருவது காணக் கொள்ளாக் காட்சி. இறைவனை தரிசிக்க வருபவர்கள் காலையில் தண்ணீர் வடிந்திருக்கும்போது கோயிலுக்குச் சென்று ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு, மாலை கடல் நீர் கோயிலை மூழ்கடிப்பதற்குள் திரும்பிவிட வேண்டும். (இதுபோன்ற திருத்தலம் நம் தமிழ் நாட்டிலும் நவபாஷாணம் என்னும் இடத்தில் உள்ளது.) கொஞ்சம் கொஞ்சமாக கடல்நீர் புகுந்து சன்னிதியை மூடி, தூண்களின் பெரும் பகுதியை மறைக்கும்போது, ஜிலீரென்று ஓர் உணர்வு பரவும். அந்தப் பகுதிக்குள் கொஞ்ச நேரத்துக்கு முன் நின்று சிவபிரானை தரிசித்துக் கொண்டிருந்தோமே என்று உணரும் போது ஆனந்தம் ஏற்படும்.