பதிவு செய்த நாள்
29
பிப்
2016
04:02
ரக்த தந்திகா - அம்பிகையின் அடுத்த அவதாரம் கேட்கவும் பார்க்கவும் பயங்கரமானது. ஆனால் இதுவே பயம் அனைத்தையும் போக்குவது. அம்பிகை இந்த அவதாரம் எடுத்த வரலாறும் சுவையானது. மஹா தபஸ்வியான காச்யப மஹரிஷியின் மனைவியரில் முக்கியமானவள் திதி. ஒரு சமயம் முனிவர் எவ்வளவு தடுத்தும் கேளாமல் சந்தியா காலத்தில் அவள் காச்யபருடன் கூடி ஆனந்தமாக இருந்த காரணத்தால் பிறந்த குழந்தைகள் அரக்கத் தன்மை கொண்டவராக விளங்கினர். அப்போது அவளது கர்ப்பத்தில் இரு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உருவானது. அவளுக்கு ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் என்ற இரு பிள்ளைகளும், ஸிம்ஹிகா என்ற பெண்ணும் பிறந்தார்கள்.
ஹிரண்யகசிபுவும் ஹிரண்யாக்ஷனும் என்ன ஆனார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். இந்த ஸிம்ஹிகை, விப்ரசித்தி என்ற அரசனை மணம் செய்து கொண்டாள். விப்ரசித்திக்கும் ஸிம்ஹிகைக்கும் பதிமூன்று அரக்கர்கள் பிறந்தார்கள். இவர்களைக் கூட்டாக வைப்ரசித்தர் என்று அழைப்பதுண்டு. அசுர வித்துக்கள் என்றால் ஒவ்வொருவரும் கொடுமை செய்வதில் சமர்த்தர்களாகவே இருந்தார்கள். ராகு, வ்யங்கன், சல்யன், பலி, நபன், மஹாபலன், கஸ்ருமன், ஆஞ்ஜிகன், நரகன், காலநாபன், வாதாபி, இல்வலன், நமுசி என்ற அவர்கள் தனித் தனியே திறமைசாலிகள், இவர்களே தானவ குலத்தின் முதல்வர்கள். இவர்களில் மூத்தவனான ராகு, அரக்கனேயானாலும் அம்ருதம் உண்டு கிரஹ பதவி பெற்று நவகோள்களில் ஒருவனாகி விட்டான் நமுசி இந்திரனின் வஞ்சகத்தால் அழிந்தான். வாதாபியையும் இல்வலனையும் அகத்திய மாமுனிவர் ஜீர்ணம் செய்து அழித்தார்.
எஞ்சி இருந்த ஒன்பது பேரும் உலக மக்களுக்கு தாங்கவொண்ணா கொடுமைகளைச் செய்தார்கள். அவர்களை அழிக்கவே தேவி ரக்த தந்திகாவாக உருக்கொண்டாள். விப்ரன் என்றால் கற்றறிந்தவன் என்று பொருள். வைப்ரசித்தர் என்றால் அறிவு மிக்கவராகவும், அதே சமயம் அநியாயத்துக்கு அஞ்சாதவராகவும் விளங்கிய தன்மை. கற்றறிந்த அறிவாளி தவறு செய்யத் துவங்கி விட்டால், செய்யும் தவறில் ருசி கண்டு விட்டால், பின்னர் ஒருவராலும் அவனைத் தடுக்க முடியாது. இப்படியொரு நிலை வந்தால் அதர்மத்தில் ருசி உண்டாகும்; கொஞ்சம் கொஞ்சமாக உலகமே அதர்மமயமாகி விடும். வைப்ரசித்தர்களும் அப்படியே. தானவ குலத்தின் இயல்புக்கு ஏற்ப கொடுமைகளையே புரிந்தார்கள். அரக்கர் செய்யும் துன்பம் தாளாமல் தேவர்களும், முனிவர்களும், மக்களும் தாயான தயாபரியிடம் முறையிட்டு அழுதார்கள். மக்களின் துயரம் கண்டு தேவி பொங்கியெழுந்தாள். அவர்களது சோகமான முறையீட்டைக் கேட்கக் கேட்க அம்பிகையின் கோபம் மேலும் மேலும் அதிகரித்தது.
அம்பிகையின் திருக்கோலம் எப்படி இருக்கிறது? சிவந்த ஆடைகளைத் தரித்து காட்சி தருகிறாள். அவளும் அதே செக்கச் சிவந்த வடிவிலேயே ஒளிர்கிறாள். அவள் ஆபரணங்களும் சிவந்தவையே. ஆயுதங்களும் ரத்தச் சிவப்பில் இருக்கின்றன. கண்களும் கோபத்தில் சிவந்து பயங்கரத் தோற்றம் காட்டுகிறது. விரல் நகங்களும், பற்களும் கூட ரத்தம் தோய்ந்து சிவந்திருக்கிறது. கட்கம், பாத்ரம், உலக்கை, கலப்பை என நான்கு கைகளிலும் ஆயுதம் தரித்து யுத்த ஸந்நத்தையாக அம்பிகை வீற்றிருக்கிறாள். கோரத்தின் மொத்த வடிவமாக கைகளில் விசித்ரமான ஆயுதங்கள்.... ரக்த சந்தனம் என்ற செஞ்சந்தனம் பூசிப் பார்த்திருக்கிறோம். ரத்தத்தையே சந்தனமாக பூசியிருக்கும் வீர சரீரம். கையில் எதிரியை துண்டு துண்டாக்கி விடும் கத்தி, ரத்தத்தைக் குடிக்கும் பாத்திரம். கலப்பையை எதிரிகளின் தலையில் அழுத்தி இழுத்து உலக்கையால் ஒரே அடியில் அவனை மரியாதையாக அனுப்பி வைக்கும் அதி பயங்கர ஆயுதங்கள். செக்கச் செவேல் என்ற உருண்ட கண்களில் அவள் பார்த்த பார்வையே எல்லோருக்கும் பயத்தை உண்டு பண்ணியது. ரக்தபானம் செய்து சிவந்த அவள் வாயும், அங்கே உலை இரும்பு போல ஆக்ரோஷமாக சுற்றிச் சுழன்று கொண்டிருந்த அவள் நாக்கும் பார்த்தவர்கள் பேச்சு மூச்சில்லாமல் ஸ்தம்பித்தே போனார்கள்.
அதர்மம் என்பதை மனத்தில் எண்ணுபவர் கூட அவளை நினைத்து தடுமாறி திருந்தி விடும் தன்மை கொண்டவளாக தேவி வந்தாள். இவ்வளவு கொடூரம் தேவையா? அன்னைக்கு தர்ம ஸ்வரூபிணியான அந்த அம்பிகைக்கு உண்டாகும் தார்மீக கோபத்தின் வெளிப்பாடுதான் இது. இவளைக் கண்டால் பயம் தோன்றத் தேவையில்லை. தர்மத்தின் வழி நடக்கும் குழந்தைகளுக்கு இந்த அம்மாவிடம் பயம் தேவையில்லை. அப்படிப்பட்ட குழந்தைகளிடம் அவள் தன் கொடூரத்தைக் காட்டவும் மாட்டாள். அதர்மத்துக்கே அவள் எதிரி. அப்படிப்பட்ட அந்த பகைவர்களையே அவள் அழித்து முடிக்கிறாள். அம்பிகை வந்த வேகத்தில் அட்டகாசத்துடனே நேரே அசுரர் படைகளுக்குள் புகுந்து விட்டாள். கையில் இருக்கும். ஆயுதங்களுக்கு அத்தனை வேலை இருப்பதாகவே தோன்றவில்லை. நேரே அசுரர்களையே ஆகாரமாக்கத் துவங்கி விட்டாள். ரவுத்ரமான உருவம் கொண்டு அம்பிகை உத்பவித்து விட்டாள். கைகளில் ஆயுதங்கள் ஏந்தி இருந்தால்தான் என்ன? அரக்கர்களை வாயால் மென்றே தின்று முடித்தாள். அரக்கர்களைத் தின்று மகிழ்கிறாள் அம்பிகை. அந்த அரக்கர் தான் செய்த பேறு என்ன? ஸாக்ஷாத் பராசக்தியான அவளுக்குள்ளேயே ஐக்கியமாகும் பாக்கியம். தாம்பூல பூரித முகீ என்ற லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்கிறது. சாப்பிட்ட பிறகு தாம்பூலம் தரித்து வாய் சிவந்தால் சரி. ஆனால், இங்கே சாப்பாட்டாலேயே வாய் சிவந்து நிற்கிறாள். ரத்தகறை படிந்த பற்கள் மாதுளம்பூப்போல விளங்கி இருந்தது. அம்பிகையின் இந்தக் கோலத்தினைக் கண்ட வானவரும். முனிவர்களும் அம்பிகையை ரக்த தந்திகா என்று போற்றி அழைத்தார்கள்.
விரல் நகம் முதல் தலை முடிவரை செக்கர் வண்ணத்தில் சிவந்திருக்கும் ரக்த சாமுண்டா என்ற இவளை வணங்குவது அத்தனை சுலபமல்ல. பத்தினி ஒருத்தி எப்படி தன் கணவனை அண்டி வாழுவாளோ அங்ஙனமிவள் மேல் மாறாத பக்தி கொண்டு தொழுதிட வேண்டும். இவளே யோகத்துக்கெல்லாம் தலைவியான யோகேஸ்வரி. ஸம்ஹார வடிவில் காணப்படும் இவளே ஞான வடிவில் அருளும் அம்பிகை. அகப்பகைவர்களை ஸம்ஹாரம் செய்து அழிப்பதுதானே உண்மையான யோகம்? ஆச்சர்யப்படும்படி கோர ரூபிணியான இவள் ஞான ஸ்வரூபிணி மட்டுமல்ல; தயா ஸ்வரூபிணியும் கூட! அவள் வடிவில் இந்த பூமியைப் போல விசாலமானவள்; மேருவைப் போல உயர்ந்து அகன்ற அழகிய இரு ஸ்தனங்களைக் கொண்டவள். இந்த உலகம் முழுதும் உள்ள அவளது குழந்தைகளுக்கு சச்சிதானந்தப் பாலினை ஊட்டி அவர்கள் வேண்டுவதும், வேண்டாததும், வேண்டத் தெரியாததும் கூட அருளுகிறாள் அன்னை. திரிபுராசுரர்களை அழிக்க வேண்டி, ஸாக்ஷாத் மஹாகாளனான பரமேச்வரனும் கூட இந்த ரக்த தந்திகா தேவியை நோக்கி தவமிருந்து அவளது அருளால் மஹாபாசு பதாஸ்திரம் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. இவளை வணங்குபவனுக்கு கனவிலும் பகைவர்கள் இருக்கமாட்டார்கள். இவனை பகையாக எண்ணுபவரையும் இல்லாமல் ஆக்கி பகைமையை அழித்திடுவாள் அம்பிகை. இந்த உலகம் அசையும் மற்றும் அசையாத பொருட்களால் ஆனது. அப்படிப்பட்ட அனைத்திலும், அணுவுக்கும் அணுவாய். அப்பாலுக்கும் அப்பாலாய் வியாபிக்கிறவள் இந்த ரக்த தந்திகா தேவியே. இந்த உலகம் அவளது ஆளுகைக்கு உட்பட்டது. அவளை சரணடைந்தவன் உலகினையும் வெல்வது உறுதி.