பதிவு செய்த நாள்
01
மார்
2016
11:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், நாளை தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த மாதம் 9ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, கோவிலில் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகளும் நடந்து வருகின்றன. கடந்த மாதம் 16ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து, பக்தர்கள் தினசரி கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர். கடந்த 23ம் தேதி முதல் பூவோடு வைத்தல் நடந்து வருகிறது. இதனையடுத்து, பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்களும் பூவோடு எடுத்து வந்து, வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை வழிபாடு செய்கின்றனர். கடந்த 26ம் தேதி கிராம சாந்தியும்; 27ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடந்தது. நாளை காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு பூஜை, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு தேரோட்டம் முதல்நாள் வெள்ளித்தேரில் அம்மன் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின், இரவு, 7:00 மணிக்கு 12 அடி உயரமுள்ள மரத்தேரில், விநாயகரும்; 21 அடி உயரமுள்ள வெள்ளி ரதத்தில் மாரியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் தேர்த்திருவிழாவில், முதல் நாள் நாளை நடக்கிறது. கோவிலிலிருந்து, மார்க்கெட் வீதி வழியாக வந்து வெங்கட்ரமணன் வீதியிலும்; மார்ச் 3ம்தேதி இரண்டாம் நாள் தேரோட்டம் துவங்கி, உடுமலை ரோடு வழியாக சத்திரம் வீதியில் தேர்நிலை நிறுத்தப்படும். பின், இறுதி நாளான வரும் 4ம் தேதி மூன்றாம் நாள் தேர்நிலைக்கு வந்து சேருதல், பாரிவேட்டை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வரும் 5ம் தேதி அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு, 9:00 மணிக்கு கம்பம் எடுத்தல்; 7ம் தேதி இரவு, 8:00 மணிக்கு மகா அபிேஷகமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
புதுப்பிப்பு: தேர்த்திருவிழா நாளை துவங்குகிறது. இதனையடுத்து, அம்மன் எழுந்தருளும் வெள்ளித்தேர் மற்றும் விநாயகப் பெருமான் எழுந்தருளும் தேரினையும் புதுப்பிக்கும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேரில், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
போக்குவரத்து மாற்றம்: பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலிலிருந்து, மார்க்கெட் ரோடு வழியாக வெங்கட்ரமணன் ரோட்டில் முதல் நாள் நாளை தேர் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோட்டூர் ரோட்டில் வரும் வாகனங்கள், கோட்டூர் ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள புதிய திட்ட சாலை வழியாக மரப்பேட்டை பார்க் ரோடு, உடுமலை ரோடு வழியாக சென்று பஸ் ஸ்டாண்டை அடையும். இதுபோன்று திருவள்ளுவர் திடல் வழியாக வரும் வாகனகங்கள், கால்நடை மருத்துவமனை ரோடு வழியாக பஸ் ஸ்டாண்டுக்கு திருப்பி விடப்படும். இரண்டாம் நாள் (3ம் தேதி) தேரோட்டமானது, வெங்கட்ரமணன் ரோட்டிலிருந்து, மாலை சத்திரம் வீதிக்கு சென்றடைகிறது. அதனால், சப்-கோர்ட்டிலிருந்து உடுமலை ரோடு தேர்நிலையம் வரையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. உடுமலை ரோட்டிற்கு வரும் வாகனங்கள், சப்-கோர்ட் அருகிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறது. கடைவீதி மற்றும் கோவை ரோட்டில் வாகனங்கள் நிறுத்தம் செய்யப்படுகிறது.சத்திரம் வீதியிலும், போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மரப்பேட்டை பார்க் ரோடு வழியாக தேர்நிலையத்திற்கு திருப்பி விடப்படுகிறது. உடுமலை ரோட்டிலிருந்து பஸ்ஸ்டாண்ட் வரும் வாகனங்கள் பல்லடம் ரோடு, நியூஸ்கீம் ரோடு வழியாக செல்ல வேண்டும். வரும் 4ம் தேதி, சத்திரம் வீதியிலிருந்து மார்க்கெட் ரோடு வழியாக தேரோட்டம் நடக்கிறது. அதனால், சத்திரம் வீதியில் இருபக்கமும், மார்க்கெட் ரோட்டிலும் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது. சத்திரம் வீதிக்கு, மாற்றாக மரப்பேட்டை பார்க் ரோட்டை பயன்படுத்த வேண்டும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.