பதிவு செய்த நாள்
07
மார்
2016
12:03
கோவில்களில், இறைவனுக்கு அடுத்ததாக, தல விருட்ஷங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. எழுந்தருளியுள்ள இறைவன், தல விருட்ஷத்தில் வாசம் செய்வதாக, ஐதீகம் உள்ளது.
அவ்வகையில், நம் விஸ்வேஸ்வரர் கோவில், தல விருட்ஷமாக பாதிரி மரம் உள்ளது. இதன் விதை முதல் இலை வரை, அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. மூலிகை மருந்தான பாதிரி மரம், தல விருட்ஷமாக உள்ளதால், இக்கோவிலுக்கு வருவதன் வாயிலாக, நோய் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுதவிர, சிவாலயங்களின் சிறப்பான அம்சமாக உள்ள வில்வ மரமும், இங்குள்ளது.
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், வில்வ மரத்தில் வாசம் செய்கின்றனர். வில்வ மரத்தின் காய், கனி, வேர் என அனைத்து பகுதிகளுமே, மருத்துவ குணம் நிரம்பியது. விஸ்வேஸ்வரர் கோவிலில், திருநீறு, குங்குமத்துடன் வில்வ இலையும், புனித நீரும் பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கப்படுகிறது. பொதுவாக, மாசி, பங்குனி மாதங்களில் பூக்கும் வில்வ மரம், பன்னீர் வாசனையுடன் மணக்கும் தன்மை கொண்டது.
வில்வம் சிவனின் அம்சம்; பிரியமான வில்வத்தை கொண்டு, சிவனை அர்ச்சித்தால், இறைவனின் திருவருளை பெறலாம். இம்மரத்தை பூஜிப்பவர்களுக்கு, அனைத்து வகையான நன்மைகளும் உண்டாகும். ஒரு வில்வ இலையை கொண்டு, இறைவனை துதிப்பது, தங்க மலர்களை கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமம் என்ற ஐதீகம் உள்ளது. இக்கோவிலின் கன்னி மூலையில், வன்னி மரம், சிவலிங்கம் போல் வடிவம் கொண்ட நாகலிங்க மரம், அம்மனுக்கு உகந்த வேம்பு போன்றவையும் உள்ளன.
விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு என, பெரிய அளவில் நந்தவனம், முன்பு இருந்துள்ளது. அந்த நந்தவனத்தில் இருந்தே இறைவனை பூஜிக்க மலர்கள் கொண்டு வந்து, பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. தற்போதுள்ள நொய்யல் பாலம், அக்காலத்தில் இல்லை; நொய்யல் கரையில் நீளமான படித்துறையே இருந்துள்ளது. கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்கள், ஆற்றில் குளித்து விட்டு, அங்குள்ள படித்துறை விநாயகரை வழிபட்ட பின், கோவில் நந்தவனத்தில் மலர்களை பறித்து வந்து, இறைவனை வழிபட்டதாக, செவிவழி செய்திகள் கூறுகின்றன.
விஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்கு என்றிருந்த நந்தவனம் இன்று மாயமாகி விட்டது; கோவில் அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதி, இன்றும் நந்தவன தோட்டம் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் திருப்பணியின்போது, சுவாமிக்கு உகந்த மரங்கள், மலர் செடிகள் வைத்து, புதிய நந்தவனத்தை, கோவில் வளாகத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில், அரிய வகை மூலிகைகள், இறைவன் வாசம் செய்யும் மரங்கள், மலர்கள் பூத்துக்குலுங்கும் கோவிலாக விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது.