மிகவும் சிதிலமடைந்து பூஜை செய்ய ஏதுவற்ற கோவில்களை மீண்டும் புதுப்பித்துக் கட்டி கும்பாபிஷேகம் செய்து தான் நித்திய பூஜை செய்ய வேண்டும். அப்படி புனர்நிர்மாணம் செய்கிற போது, தெய்வ விக்ரகங்களைப் பாதுகாத்தும், நித்ய பூஜைகள் நிற்காமல் நடைபெறவும் செய்யப்படுவதே பாலாலயம். இதை இளங்கோவில் என்று சொல்வார்கள். நம் வீட்டைப் புதுப்பித்துக் கட்டும் போது, தற்காலிகமாக சிறிது காலம் வாடகை வீட்டில் குடியிருப்பதை இதற்கு ஒப்பிடலாம். வீடு கட்டி முடிந்த பிறகு கிரகப்பிரவேசம் செய்வது போல் கும்பாபிஷேகத்தையும் குறையில்லாமல் செய்ய வேண்டும். பாழடைந்த கோயிவில் தெய்வபூஜை செய்தால் உலகிற்கு தீமை உண்டாகும். பாலாலயம் செய்து திருப்பணி முடிந்து கும்பாபிஷேகத்தையும் சிறப்பாக செய்தால் இடையில் நிகழ்ந்த பூஜை குறைபாடுகள் நீங்கி அந்த ஊர் நன்மை பெறும். இன்று பல்லாயிரம் கோவில்கள் கவனிப்பாரற்று கிடக்கின்றன. பூஜைகள் சரிவர நிகழவில்லை. அந்த ஊர் மக்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ஒட்டு மொத்த அரசாட்சியும் நிலை தடுமாறுகிறது. இதனை திருமூலர் திருமந்திரத்தில் முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்குள என்கிறார்.