சூரியனார்கோவிலில் சிவசூரியபெருமானுக்கு மகாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2011 12:08
கும்பகோணம்: ஆடுதுறை அருகே சூரியனார்கோவில் சிவசூரியபெருமானுக்கு நேற்று நடைபெற்ற மகாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையை அடுத்துள்ள சூரியனார்கோவிலில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான உஷாதேவி, பிரத்யுஷாதேவி உடனாய சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. தமிழகத்தில் நவக்கிரகங்களுக்கென்று தனியாக அமையப்பெற்றுள்ள ஒரே கோவில். சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் தமிழ் மாதந்தோறும் முதல் ஞாயிறன்று உற்சவர் சிவசூரியபெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் ஆவணி முதல்ஞாயிறு என்பதால் காலை 10 மணிக்கு மகாபிஷேகத்திற்கான சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து 11 மணிக்கு உற்சவர் உஷாதேவி, பிரத்யுஷாதேவி உடனாய சிவசூரியபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து கட அபிஷேகம் அதன்பின் சிறப்பு புஷ்பலங்காரம் நடந்தது. பலவிதமான நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டு விசேஷ தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் மீனாட்சிசுந்தரம் கலந்துகொண்டு முன்னிலை வகித்தார். மகாபிஷேகத்தில் உபயதாரர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.