பதிவு செய்த நாள்
14
மார்
2016
11:03
திருவண்ணாமலை: -தண்டராம்பட்டு அருகே, மூட்டைகளில் கிடந்த ஐம்பொன் சிலைகள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். திரு வண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே, தானிப்பாடி வனவர் சங்கர் தலைமையில், கல்வராயன் தொடர்ச்சி மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நாவக்கொல்லை என்ற இடத்தில் அனாதையாக, இரண்டு மூட்டைகள் கிடந்ததை பார்த்தனர். பிரித்து பார்த்ததில், காளி சிலை, பெருமாள், சூரியபகவான், தெய்வானை மற்றும் சீதா தேவி, பூதேவி சமேத ராமர் சிலைகள் என, ஒரு அடி முதல் மூன்றடி உயரம் வரை கொண்ட, ஆறு ஐம்பொன் சிலைகள் இருந்தன. சிலைகளை தானிப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடம், விழுப்புரம் மாவட்டம், காரியாலுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்டது என்பதால், தானிப்பாடி போலீசார், அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். காரியாலுார் போலீசார் சிலைகளை பார்த்தபோது, அப்பகுதியில் பெருக்கஞ்சேரி கிராம கோவிலில் இருந்து காணாமல் போன சிலைகள் தான் அவை என்பது தெரியவந்தது. சிலைகளை கடத்திய மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.