பதிவு செய்த நாள்
14
மார்
2016
03:03
சாந்தமுடையவராகவும், தனக்கு மேம்பட்டவர் எவருமில்லை என்பதால் சகல கர்த்தாவாகவும் விளங்குபவர் சிவபெருமான். மகாபிரளயத்திலும் சக்திரூபமாய் லயித்திருக்கும் அழிவற்றவர். ஞானத்தால் அனைத்தையும் அறிந்த சர்வக்ஞராகவும், சுயம்பிரகாசராயும் விளங்குபவர். சூட்சும ரூபமாகவும், ஸ்தூல வடிவமாகவும், ஞானக்கிரியா சக்தி சரீரியாகவும் தோன்றுபவர். பிறவிக்கடலில் துன்புறும் ஆன்மாக்கள் கரையேறி தம்மை அடைந்து இன்புற கருணைகொண்டு, அவரவர்க்கேற்ப தியானிக்கும் ரூபங்களில் அருள்புரிபவர். நிலத்தில் சர்வராகவும், நீரில் பவராகவும், நெருப்பில் ருத்திரராகவும், காற்றில் உக்கிரராகவும், ஆகாயத்தில் வீமராகவும், சூரிய மண்டலத்தில் மகாதேவராகவும், சந்திர மண்டலத்தில் ஈசானராகவும், ஆன்மாவில் பசுபதியாகவும் அமர்பவர்.
இவ்வாறு எவ்வளவோ அருந்தன்மைகளையுடைய ஈசன், பக்தர்களை நல்வாழ்வில் நடத்திச் செல்ல பல்வேறு திருத்தலங்களில் அருவுருவம் எனும் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். அவற்றுள் ஒன்றாக விளங்குகிறது ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சிவன் கோயில். இங்குள்ள சிவலிங்கத்துக்கு ஆண்டு முழுக்க, 24 மணிநேரமும் அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகத்தைச் செய்வது மனிதர்களல்ல; கங்காதேவி. இக்கோயில் கண்டறியப்பட்டது கடந்த நூற்றாண்டில் தான். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் ரயில் பாதை அமைக்கும் பணி 1925-ல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது மேடாக இருந்த ஓரிடத்தைத் தோண்டியபோது இக்கோயில் இருப்பதைக் கண்டனர். அதற்குள் சிவலிங்கம் இருக்க, அருகே இருந்த சுவரில் கங்காதேவியின் வெண்ணிறச் சிற்பமும் இருந்தது. அந்த சிற்பத்தின் தொப்புள் பகுதியிலிருந்து இருபுறம் வெளியேறும் நீர் சிவலிங்கத்தின் மீது விழுகிறது. இப்படியொரு அமைப்பைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர்.
இவ்வாறு தண்ணீர் சிவலிங்கத்தின்மீது விழுவது எப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. அருகில் ஆறோகுளமோ எதுவுமில்லை. அப்படியிருக்க இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறதென்பது இதுவரை அறியமுடியாத புதிராக உள்ளதென்கிறார்கள். இந்த அபிஷேக நீரையே இங்கு வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாக கொடுக்கிறார்கள். அதை வாங்கிச் செல்லும் பக்தர்கள் தங்கள் வீட்டில் யாரேனும் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ, பிரச்சினைகளால் துன்பமுற்றாலோ அவர்களுக்குக் கொடுக்கிறார்கள். துன்பங்கள் விலகுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். கோயிலில் வெளியேறிக்கொண்டிருக்கும் நீரானது சிறு வாயக்கால்போல நெடுந்தூரம் சென்று ஒரு நதியில் கலக்கிறது. கோடை காலத்திலும் இது தடைப்படுவதில்லை. மனிதன் உண்டாக்காத ஊற்று இதுவென்கிறார்கள். இக்கோயிலுக்கு வெளியே பக்தர்கள் வசதிக்காக ஒரு கை பம்பு அமைத்துள்ளார்கள். ஆனால் அதை அடிக்கத் தேவையில்லை. அதிலிருந்தும் நீர் தானாக வந்துகொண்டிருக்கிறது. இக்கோயில் இருக்கும் பகுதியை டூட்டி ஜர்னா என்கிறார்கள். குழாய் நீரூற்று என்று பொருள். இங்குள்ள சிவலிங்கத்தின் முன்நின்று பக்தர்கள் தங்கள் குறைகளை மனதிற்குள்ளே சொல்லிக் கொண்டால் போதும்; விரைவில் அவை நீங்கி விடுகின்றனவாம். பொதுவாக ஒருவருக்கு சந்திர கிரகத்தால் பாதிப்பு நிகழுமானால் அவருக்க சரியாக தூக்கம் வராது. இரவு முழுவதும் புரண்டு கொண்டே இருப்பார். அடிவயிற்றிலும் தொல்லைகள் ஏற்படலாம். அத்தகையுவர்கள் இங்குவந்து வழிபட்டால் நலம் பெறலாம். ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் டூட்டி -ஜர்னா உள்ளது.