நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் உறங்காப்புளி மரத்தின் வடிவில் லட்சுமணர் இருக்கிறார். நம்மாழ்வார் இம்மரத்தின் அடியில் இருந்தபடியே மகாவிஷ்ணுவை வணங்கி மங்களாசாசனம் செய்தார். பட்டுக்கோட்டை அருகிலுள்ள பரக்கலக்கோட்டை ஆவுடையார்கோவிலில் உள்ள ஆலமரத்தை, சிவபெருமானாகக் கருதி வழிபடுகின்றனர். இம்மரத்தின் ஒரு பகுதியை லிங்கம் போல அலங்காரம் செய்து பூஜிக்கின்றனர். திருவொற்றியூரில் சுந்தரர் மற்றும் சங்கிலியாருக்கு, சிவன் ஒரு மகிழமரத்தடியில் திருமணம் செய்து வைத்தார். இம்மரத்தின் அடியில் சிவன் பாதம் இருக்கிறது. இதனால் இந்த மரமும் சிவனாகவே கருதி வழிபடப்படுகிறது. குற்றாலம் கோவிலில் உள்ள பலாமரம் குறும்பலாநாதர் (சிவன்) என்னும் பெயரில் வணங்கப்படுகிறது. திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் உள்ள அரசமரத்தின் கீழ், சிவன் தேவர்களுக்காக தாண்டவம் ஆடியதால் இம்மரத்தையும் சிவனாகவே கருதுகிறார்கள். மரங்களின் முக்கியத்துவமும் அவற்றைத் தெய்வமாகக் கருதி பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் இதன்மூலம் வெளிப்படுகிறது.