சித்தலுார் கோவில் திருவிழா துவக்கம்: அடிப்படை வசதியின்றி பக்தர்கள் அவதி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2016 11:03
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன்கோவில் தேர்திருவிழா நாளை நடக்கிறது. அங்கு அடிப்படை வசதியின்றி பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தியாகதுருகம் அடுத்த சித்தலுார் கிராமத்தில் மணிமுக்தா ஆற்றின் கரையில் பிரசித்திபெற்ற பெரியநாயகிஅம்மன் கோவில் உள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் ஆண்டு முழுவதும் அதிக அளவில் இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து, முடிகாணிக்கை செலுத்துதல், காதுகுத்தி நேர்த்திகடன் செலுத்துவது அதிகரித்து வருகிறது. அம்மனுக்கு உகந்த ஆடி, தை மாதங்களிலும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும் அமாவாசை, வார வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பெண் பக்தர்கள் குளிக்க பாதுகாப்பான இடமின்றி தவிக்கும் நிலை உள்ளது. தற்போது மாசித்திருவிழா துவங்கியுள்ளதை தொடர்ந்து தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்று 8 ம் நாள்: திருவிழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு மயானக்கொள்ளை நிகழ்ச்சியும், நாளை (16ம் தேதி) தேர்திருவிழாவும் நடக்கிறது. இதைகாண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவியத்தொடங்கியுள்ளனர். இவர்கள் போதிய அடிப்படை வசதியின்றி மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். கோவில் வளாகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே குடிநீர் குழாய் உள்ளது. இவ்விடங்களில் அதிக கூட்டம் அலைமோதுவதால் நீ ண்ட நேரம் காத்திருந்து குடிநீர் பெறவேண்டிய நிலை உள்ளது. கழிவறை இல்லாததால் கோவிலையொட்டி செல்லும் மணிமுக்தா ஆற்றை இயற்கை உபாதை கழிக்க பலரும் பயன்படுத்துவதால் நீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஆற்று நீரை குளிக்க பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகம் கூடும் இக்கோவிலில் அடிப்படை வசதியை மேம்படுத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. கோவில் வளாகத்தில் குடிநீர், கழிவறை, குளியலறை வசதிகளை ஏற்படுத்திட சம்பந்தபட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.