ஒட்டன்சத்திரம்: பங்குனி உத்திரத்தையொட்டி பழநி செல்ல, ஒட்டன்சத்திரம் பகுதி கிராமங்களில் முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். ஆண்டுதோறும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் உள்ள கிராம மக்கள், பங்குனி உத்திரத்தன்று பழநிமலை முருகனை தீர்த்தக் காவடிகளுடன் சென்று வழிபடுவர். பங்குனி முதல் தேதியன்று, கிராமங்களில் உள்ள விநாயகர் கோயில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்குவர். பங்குனி உத்திரம் நடைபெறும் நாளுக்கு 2 நாள்கள் முன்பு கொடிமுடி சென்று, கலசங்களில் காவேரி தீர்த்தம் கொண்டு வருவர். விழாவிற்கு முதல் நாளன்று கொடிமுடியிலிருந்து கொண்டு வந்த தீர்த்தக் கலசங்களை சுமந்தபடி பாதயாத்திரையாக சென்று, மறுநாள் அதிகாலை பழநியை அடைவர். அன்றைய தினம் மலைக் கோயிலுக்கு கலசங்களை எடுத்துச் சென்று, தீர்த்தம் செலுத்தி முருகனை வழிபடுவர்.