பரம்பொருள் என்று சொல்லப்படும் பேரின்ப நிலையை நோக்கி, தியானம் நம்மை அழைத்துச் செல்லும். மவுனம், தியானம் ஆகியவற்றுக்கு மனதைத் தூய்மைப்படுத்தும் சக்தி உண்டு. நமது வாழ்க்கை தூய வாழ்க்கையாகவும் நிறை வாழ்க்கையாகவும், நிம்மதியான வாழ்க்கையாகவும் அமைவதற்கு, நாள்தோறும் தியானத்தில் கவனம் செலுத்தி உழைக்க வேண்டும். ஒரு சில நிமிடங்களைக் கூட இறைவனுக்காக ஒதுக்க முடியாமல், உலக விவகாரங்களிலேயே மூழ்கியிருப்பவர்களாகப் பலர் இருந்துகொண்டிருக்கிறார்கள். சமுதாயத்தில் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதை அனுபவபூர்வமாக நாம் அறிந்திருக்கிறோம். எனவே முன்பு எப்போதையும் விட இன்று மக்களுக்கு ஆழமான இறைபக்தி தேவைப் படுகிறது. முறையாகத் தொடர்ந்து தியானம் செய்வதால் நான், எனது என்ற அகங்கார மமகாரங்கள் நம்மை விட்டு நீங்கும், நாம் நினைத்தும் பார்க்காத ஏராளமான நன்மைகள் நமக்கு ஏற்படும் என்பது சான்றோர்களின் கருத்து.