பதிவு செய்த நாள்
19
மார்
2016
12:03
ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் கோவில் மகா சம்ப்ரோஷணம் மார்ச்18 நடந்தது. கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம், பூவராக பெருமாள் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சம்ப்ரோஷணத்துக்கு தேதி குறிக்கப்பட்டது.
மகா சம்ப்ரோஷணத்தை முன்னிட்டு, பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள், கடந்த 14ம் தேதி துவங்கியது. யாகசாலை பூஜைகள், 16ம் தேதி துவங்கி, தினசரி பூஜைகள் நடந்து வந்தது. மகா சம்ப்ரோஷண தினமான மார்ச்18, அதிகாலை, கும்ப மண்டல அக்னி சதுஸ்தான ஆராதனம், சிறப்பு ஹோமங்கள், ஐந்தாம்கால பூஜை நடந்தது. கலசங்கள் புறப்பாடாகி, காலை 10:00 மணிக்கு, மூலவர் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ராஜகோபுரம், அம்புஜவல்லி தாயார், ஆண்டாள், வேணுகோபாலன் சன்னதி உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா சம்ப்ரோஷணம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் யக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூமிதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சம்ப்ரோஷண விழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.