பதிவு செய்த நாள்
19
மார்
2016
04:03
தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோயிலில், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, கண்கொள்ளகாட்சியாக கல்கருட சேவை விழா மார்ச்18ல், நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநரையூர் எனப்படும் நாச்சியார்கோவிலில் சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் திருமங்கையாழ்வாரால் 100 பாசுரங்களால் மங்களா சாசனம் செய்யப்பட்டுள்ள தலம் ஆகும். ராமாயணத்தில் ராமனுடன் சீதாபிராட்டியினை சேர்த்து வைத்து பெருமையடைந்த அனுமனைப்போல் பெருமையுடைய விரும்பிய பட்சிராஜன் தனது அவாவினை பெருமாளிடம் தெரிவிக்க அதனை நிறைவேற்றும் விதமாக லட்சுமியானவர் இத்தலத்தில் மேதாவி மகரிஷியின் மகளாக அவதரிக்க, பின்னாளில் கல்கருடபகவான் தாயாரை தேடி இத்தலத்தில் இருப்பதை அறிந்து, பெருமாளிடம் தெரிவித்து பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமணம் நடத்திய பெருமை பெற்றவராவார்.
எனவே இத்தலத்தில் பெருமாள் தாயார் திருமணக்கோலத்தோடு காட்சியருள்பவராக இருக்க, பெருமாளின் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் சக்தி பெற்றவராக கல்கருடபகவான் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். சிறப்புமிக்க இத்தலத்தில், ஆண்டுதோறும் தமிழ்மாதமான பங்குனி மாதத்தில் 10 நாட்கள் திருத்தேர் விழா நடைபெறும். கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவையொட்டி இரவு சூரிய பிரபையில் பெருமாள் மற்றும் தாயார் எழுந்தருளி வீதியுலா காட்சி நடந்தது. பங்குனி மாத பிரமோற்சவத்தில் 4ம் நாள் திருவிழாவாக உலகப்பிரசித்தி பெற்ற கல்கருட சேவை திருவிழா மார்ச்18ல், நடந்தது.
உற்சவராகவும், மூலவராகவும் உள்ள கல்கருட புறப்பாட்டின் போது முதலில் 4 பேரும் பின்னர் படிப்படியாக 8, 16, 32, 64 பேர் என கல்கருடனை தூக்கிக்கொண்டு பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து செல்வதும் சிறப்பு வாய்ந்த கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். சீனிவாசபெருமாள் கல்கருடவாகனத்திலும், வஞ்சுளவல்லி தாயார் வெள்ளி அன்னபட்சி வாகனத்திலும் வீதியுலா நடந்தது. 9ம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 23ம்தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மதியம் 2 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. நிறைவு விழாவாக வருகிற 24ம்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி மற்றும் தாயார் படிச்சட்டத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் குணசேகரன் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.