பதிவு செய்த நாள்
22
மார்
2016
02:03
மணிகண்டன், சாஸ்தா, பூதநாதன், அரிகரன், ஆரியதாதா என சாஸ்தாவுக்கு பல பெயர்கள் உண்டு. இந்த பெயர்களின் விளக்கத்தைக் கேளுங்கள்.
மணிகண்டன்: குழந்தை இல்லாத ராஜசேகர பாண்டிய மன்னர், வேட்டைக்குச் சென்ற போது பம்பை நதிக்கரையில் குழந்தையின் அழுகுரல் கேட்டார். அங்கு கழுத்தில் மணி கட்டிய நிலையில் ஒரு ஆண் குழந்தையைக் கண்டெடுத்தார். கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்று பெயரிட்டு வளர்த்தார் என ஐயப்பன் சரிதம் கூறுகிறது. கண்டன் என்றால் கழுத்தை உடையவன். மணி கட்டிய கழுத்தை உடையவன் என்பதால் மணிகண்டன் ஆனார். நவரத்தினம், ருத்ராட்சம் ஆகியவற்றையும் மணி என்றே குறிப்பிடுவர். அந்த குழந்தை கழுத்தில் கிடந்த மணி நவரத்தின மணியாகவோ, ருத்ராட்ச மணியாகவோ இருந்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஐயப்பன்: சாஸ்தாவின் ஒரு அவதாரமே ஐயப்பன். ஐயன், அப்பன் என்னும் இரு சொற்களின் சேர்க்கை இது. ஐயன் என்பது சிவனையும், அப்பன் என்பது திருமாலையும் குறிக்கும். மலைநாட்டு(கேரள) திவ்யதேசங்களில் உள்ள பெருமாளை அப்பன் ( திருக்காக்கரையப்பன், திருவாறன்விளை பாம்பணையப்பன்) என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. தேவாரப் பாடல்களில் சிவன் ஐயன் என்று பல பாடல்களில் அழைக்கப்படுகிறார். பெற்றோரான சிவன், திருமால் இருவராலும் வழங்கப்படும் பெயர் ஐயப்பன் என்பதாகும். ஐயன் என்ற சொல்லுக்கு முதன்மையானவன் என்றும் பொருள் உண்டு.
பூதநாதன்: எட்டு திசைகளையும் காவல் புரிவதற்காக சிவன் எட்டு பூதங்களைப் படைத்ததாக ஐதீகம். அவை கிழக்கு- வெள்ளை நிற சம்வர்த்தனன், தென் கிழக்கு- பொன்னிற உன்மத்தன், தெற்கு- கருமை நிற குண்டோதரன், தென்மேற்கு- சிவப்பு நிற தீர்க்க காயன், மேற்கு- பச்சை நிற ஹிரஸ்வபாதன், வடமேற்கு- புகை நிற சிங்க ரூபன், வடக்கு- ரத்த நிற கஜமுகன், வடகிழக்கு- நீலநிற பிரிய முகன். சிவபெருமானே பூதங்களின் தலைவனாக ஐயப்பனை நியமித்தார். அதனால் அவருக்கு பூதநாதன் என்ற பெயர் ஏற்பட்டது.
அரியபுத்திரன்: அரி என்பது திருமாலையும், அரன் என்பது சிவனையும் குறிக்கும். இரு ஆண்களுக்குப் பிறப்பது என்பது அரிய நிகழ்வு என்பதால் சாஸ்தாவுக்கு அரியபுத்திரன் என்ற பெயர் அமைந்தது.
ஆர்ய தாதா: ஆர்ய என்பதற்கு சிறந்த என்றும், தாதா என்பதற்கு தலைவன் என்றும் பொருள். சிறந்த தலைவன், மதிப்பிற்குரியவன் என்ற பொருளில் சாஸ்தாவை ஆர்ய தாதா என்கிறார்கள். ஐயப்பன் எழுந்தருளி இருக்கும் வனம் சூழ்ந்த ஒரு பகுதியை ஆரியங்காவு என்கின்றனர்.