பதிவு செய்த நாள்
23
மார்
2016
12:03
பழநி: பழநி பங்குனிஉத்திர திருவிழாவையொட்டி பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 5 டன் பூக்களால் பாதவிநாயகர் கோயில் முதல் மலைக்கோயில் உட்பிரகாரம் வரை அலங்கரிக்கப்படுகிறது.இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பாதவிநாயகர் கோயில், மலைக்கோயில் உட்பிரகாரம், பாரவேல் மண்டபத்தில், மஞ்சள், பிங்க், ரோஸ் என பலவண்ண ரோஜா பூக்கள், பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்படுகிறது. இதற்காக பெங்களூருவில் இருந்து ஜருபுரா, அந்தோரியம், டச் ரோஜா பூக்கள், ஓசூர், சென்னை யில் இருந்து மல்லிகை, செவ்வந்தி உட்பட மொத்தம் 5 டன் பூக்கள் வந்து குவிந்துள்ளன. பாதவிநாயகர் கோயில் அருகே தென்னை ஓலைக் குருத்துக்களால் விநாயகரும், மலைக்கோயில் உட்பிரகாரத்தில் வண்ண மலர்களைக் கொண்டு மயில் ரங்கோலியும், திராட்சை, மாங்காய் தோரணங்களும் அமைக்கப்படுகின்றன. மலைக்கோயில் மண்டப துண்களை மாலைகள், பூங்கொத்துகளால் அலங்கரிக்கும் பணியில் 50 பேர் ஈடுபட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த சுவாமிநாதன் மற்றும் திருப்பதியில் புஷ்ப அலங்காரம் செய்யும் குணசேகரன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
குணசேகரன் கூறுகையில்,“ திருப்பதியை போல பழநிகோயிலில் 5 ஆண்டுகளாக வண்ண பூக்களால் அலங்காரம் செய்கிறோம். இவ்வாண்டு வெள்ளி ரதத்திற்கும் மலர் அலங்காரம் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது,” என்றார். இதேபோல, திருஆவினன்குடி கோயிலில் பழநி புஷ்ப கைங்கர்ய சபா சார்பில் 1000 கிலோ பூக்களால் அலங்காரம் செய்கின்றனர்.