பதிவு செய்த நாள்
24
மார்
2016
12:03
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், பங்குனி உத்திர பெருவிழாவை ஒட்டி, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் மயில்காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து, மூலவரை வழிபட்டனர். திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, பங்குனி உத்திர பெருவிழாவை ஒட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து தங்கவேல், தங்கக்கிரீடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:00 மணிக்கு நகரத்தார் திருத்தணி பாத யாத்திரை டிரஸ்ட் சார்பில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், மயில்காவடிகள் எடுத்தும், 300 பெண்கள் பால்குடம் தலையில் சுமந்தும், மலையடிவாரத்தில் உள்ள திருக்குளத்தில் இருந்து, மலைப்படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர்.பின், காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, விபூதி, நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம் மற்றும், 300 பால்குட அபிஷேகம் நடந்தது.மதியம், 1:00 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு தங்கத்தேர் வீதியுலா நடந்தது. இதே போல், திருத்தணி, சுந்தர விநாயகர் கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, உற்சவர் சிவகாமி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், மாட்டு வண்டியில் நகர வீதியில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.