திருக்கனுார்: திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசனம் நேற்று நடந்தது. திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான திருவக்கரை கிராமத்தில் பழமையான சந்திர மவுலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், வளாகத்தில் அமைந்துள்ள வக்ரகாளியம்மனுக்கு மாதம்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் ஜோதி தரிசனம் நடந்து வருகிறது. நேற்று பவுர்ணமியை முன்னிட்டு, வக்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை 5:30 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 12:00 மணிக்கு வக்ரகாளியம்மன் கோவில் கோபுரத்தில் ஜோதி தரிசனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாலசுப்ரமணிய ராஜன், மேலாளர் ரவி, உதவி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.