பதிவு செய்த நாள்
24
மார்
2016
01:03
திருச்சி: திருச்சி குமார வயலுார் முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, நேற்று, வெகு விமரிசையாக நடந்தது. திருச்சி சோமரசம் பேட்டை குமார வயலுார் சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா நேற்று துவங்கியது. வரும், 27ம் தேதி வரை நடக்கிறது. பால் காவடி :விழாவில் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பக்தர்கள் பால் காவடி எடுத்தும், அலகு குத்தி பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். மதியம், 12:00 மணிக்கு, பாலாபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை, 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு, 10 மணிக்கு, சிங்கார வேலர் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.மார்ச், 26ம் தேதி, முருகப் பெருமான் வேலன், வேடன் விருத்தனாக வருதலும், தொடர்ந்து யானை விரட்டல் காட்சி நடைபெறுகிறது. பங்குனி உத்திர திருவிழாவின் இறுதி நாளான, 27ம் தேதி காலை, 10:00 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் வள்ளி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. சென்னிமலை:ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் மலை மீது அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடந்தது. தொடர்ந்து, சுவாமி புறப்பாடு நடந்தது. சுவாமி தேர் நிலையை மூன்று முறை வலம் வந்தது. காலை 6:40 மணிக்கு, தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.