நொய்யல்: கரூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட, நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா காப்புக்கட்டுதலுடன் கடந்த வாரம் துவங்கியது. அம்மன் அழைத்தல், ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. நேற்று காலை, 7.30 மணிக்கு சுவாமி ரதம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. பெண்கள் மாவிளக்கு வைத்து அம்மனை வழிபட்டனர். அத்துடன் நேர்த்திக்கடனாக பொங்கல் வைத்தும் வழிபட்டனர். பூர்வீக தானம் கொடுத்தல், தேர்நிலை பெயர்தல், குழிவெட்டுதல், நிகழ்ச்சிக்கு பின்னர் தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர்த்திருவிழா முன்னிட்டு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பூசாரியப்பன் அரிவாள் மீது ஏறி முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் அம்மனை வழிபட்டதுடன் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி குறைகளை தீர்த்துக் கொண்டனர்.