பதிவு செய்த நாள்
28
மார்
2016
12:03
கரூர்: ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட, வஞ்சுலீஸ்வரர் கோவில் பிரம்ம குளம் சீரமைப்பு பணி முடிவடையும் தருவாயில் உள்ளதால், பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர். கரூரில், பிரம்மா சாலையில், பழமை வாய்ந்த வஞ்சுலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு சொந்தமான பிரம்மகுளம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததால், குளம் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தன. திருத்தொண்டர்கள் சபை, அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் குளத்தை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, கடந்த, 2013, ஆக., 7ம் தேதி குளம் மீட்கப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. செடிக்கொடி, குப்பைகளால் குளம் மறைக்கப்பட்டு இருந்தன. சிவனடியார்கள் குளத்தை தூய்மைப்படுத்தி, புனித குளமாக மாற்றும் பணியில் ஈடுபட்டனர். தனியார் பங்களிப்பும் குளம் பிரமாண்ட முறையில் தயராகி வருகிறது. பணி நிறைவடையும் தருவாயில் உள்ளதால், சிவனடியார் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, திருத்தொண்டர் சபையினர் கூறியதாவது: பிரம்மா, இத்தலத்துக்கு வந்து, வஞ்சுலீஸ்வரர் திருக்கோவிலுக்கு எதிரில் பிரம்மதீர்த்த குளத்தை தோற்றுவித்து, தீர்த்தத்தில் தினமும் குளித்து சிவபெருமானை வழிபட்டார். அதன் பலனாக மீண்டும் படைப்பாற்றலை சிவபெருமான் தந்தருளினார் என்பது வரலாறு. பிரம்மாவால் தோற்றுவிக்கப்பட்ட குளம் ஆக்கிரமிக்கப்பட்டால் குளம் காணாமல் இருந்தன. திருத்தொண்டர்கள் சபை, அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு, அரசுத்துறை அதிகாரிகள் மூலம், குளத்தை புனித குளமாக மாற்றும் பணி கடந்த ஆறு, மாதங்களுக்கு மேல் நடக்கிறது. தற்போது, 90 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.