சூரபத்மனை அழிக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. கங்கை நதியில் விழுந்த அவற்றின் உஷ்ணத்தை அந்த நதியால் தாங்க முடியாததால் கரையில் இருந்த தர்ப்பைக் காட்டில் ஒதுக்கியது. கங்கையின் புனிதத்தாலும், தர்ப்பையின் சக்தியாலும் ஆறு தீப்பொறிகளும் ஆறுகுழந்தைகளாகி பின் உமாதேவியின் அருளால் ஆறுமுகமும் பன்னிருகரங்களும் கொண்டு ஒரு திருமுருகனாக இவ்வுலகம் உய்யத் தோன்றியது. கங்கையில் சேர்ந்ததால் காங்கேயன் என்றும் தர்ப்பைக்காட்டில் உதித்ததால் சரவணபவன் என்றும் கந்தன் போற்றப்படுகிறார். சரவணம் என்றால் தர்ப்பை. பவ என்றால் தோன்றியவர் என்று பொருள். மகிமை வாய்ந்த இத்தோற்றத்தைக் குறிக்கும் சொல்லே சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரமாயிற்று.