ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஒவ்வொரு அமாவாசைக்கும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். அமாவாசைக்கு முதல் நாள் கோவில் நடை பக்தர்கள் வசதிக்காக மூடப்படாமல் இரவு முழுவதும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். நேற்று ஞாயிற்று கிழமையில் அமாவாசை வந்ததால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. டி.எஸ்.பி., பழனிச்சாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் ஏரளாமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ரமேஷ், கண்காணிப்பாளர் செந்தமிழ்செல்வன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், அமாவாசையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பலரும் ஆற்றங்கரையோரம் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இறைவனை தரிசித்தனர். உடுமலை மாரியம்மன் கோவில், சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில்,சிறப்பு பூஜைகள் நடந்தன.