உத்தமமான தினங்கள் மூன்று. ஒன்று அட்சய திரிதியை. அன்று எந்த நல்ல காரியம் செய்ய ஆரம்பித்தாலும் அ+க்ஷயம்- அதாவது குறைவற நிறை வேறும். மகாராஷ்டிரத்தில்தான் இதனை மிகவும் அனுஷ்டிக்கிறார்கள். இரண்டாவது, நவராத்திரிக்கு அடுத்த நாளான விஜயதசமி. அம்பிகை துர்க்கையாக- பராசக்தியாக - சிவன் விஷ்ணு பிரம்மா ஒன்றிய பராசக்தியாக உதித்து மகிஷாகரனை அழித்த நாள். எல்லா செயல்களிலும் வெற்றிபெற விரும்பி பூஜிக்கும் நாள். வெற்றி நிச்சயம் என நம்பிக்கையுடன் தொழும் நாள். மூன்றாவது, பவுர்ணமியுடன் இணைந்துவரும் பங்குனி உத்திரம் இதற்கு காரணம் என்ன?
சர்வகல்யாண மங்கள நாள்: முருகன் கோயில்களில் வள்ளி மற்றும் தேவசேனை திருமண வைபவம் நடைபெறும் நாள். (எந்த நாளில் நடந்ததென்று கந்தபுராணம் கூறவில்லை. திருப்பரங்குன்றத்தில் தேவசேனை கல்யாணம்; சுவாமிமலையில் வள்ளி கல்யாணம்) சிவ-பார்வதி மணம் நடந்த தினம் உத்தமமான பங்குனி உத்திரமே என்று கந்தபுராணம் (சம்பவ காண்டம் - அத்யாயம் 17) கூறுகிறது. இதை பின்வரும் சுலோகங்கள் மூலம் அறியலாம்.
ஏழாமிடம் சுத்தமாக இருக்கும் ராசியில் மகாதேவனுக்கு பார்வதியை தானம் செய்து கொடுக்கவும். எல்லா உலகங்களுக்கும் பந்துவாகிய பரமேஸ்வரனுக்கு எல்லா பொருத்தமும் இருக்கின்றன.
எனவே எல்லா சிவத்தலங்களிலும் முக்கியமாக காஞ்சி காமாட்சி ஏகாம்பர நாதர் கோயிலும் சிவ- பார்வதி திருமணம் வைபவம் சிறப்பாக நடக்கும்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணமும் முன்னர் பங்குனி உத்திரத்தில்தான் நடந்தது. பின்னர் மீனாட்சி வளர்த்த குழந்தையானந்த சுவாமிகளின் கூற்றுக்கிணங்க, பாண்டிய மன்னனின் ஆக்ஞையால் அது சித்திரை உத்திரத்துக்கு மாற்றப்பட்டது.
பொதுவாக சிவன் கோயில் உற்சவ தினங்களில் பெருமாள் கோயில்களில் யாதும் இருக்காது. இதற்கு பங்குனி உத்திரம் விலக்கு. பெருமாள் கோயில்களிலும் உற்சவங்கள் நடக்கும்.
பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதும், அவளை விஷ்ணு மணம் புரிந்ததும் பங்குனி உத்திரத் திருநாளே.
ஆண்டாள் ஆடிப்பூரத்தில் உதித்தவள். பங்குனி உத்திர நாளில் கல்யாணக் கோலத்துடன் அரங்கனுள் ஐக்கியமானாள்.
ஸ்ரீரங்கத்தில் தனிக்கோயில் கொண்டிருக்கும் ரங்கநாயகி, ரங்கநாதருடன் சேர்ந்திருக்கும் ஒரே நாள் பங்குனி உத்திரம்தான். அதற்கு சேர்த்தி உற்சவம் என்று பெயர். இரவு முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடந்ததும் இந்த புனித நாளில்தான். ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பின்வருமாறு கூறுகிறது.
ஜனகர் கூறினார்: என்னுடைய புதல்வியான இந்த சீதை உன்னுடன் தர்ம காரியத்தில் ஈடுபடுவாள். அவள் கரங்களைப் பற்றுவாயாக. அவள் பதிவிரதை, நிழல்போல உன்னைத் தொடருவாள் என்று மந்திரம் சொல்லி நீர்விட்டு சமர்ப்பித்தார். வந்திருந்த ரிஷிகணங்கள் ஆசீர்வதித்தனர். தாளமேளங்களை தேவர்கள் கொட்டினர். மலர்களைச் சொரிந்தவர்.
ராமன்-சீதா கல்யாணம் மட்டுமா நடந்தது? பரதன் - மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன் - சுருதகீர்த்தி என்று நான்கு கல்யாணங்கள் ஒரே நாள்- ஒரே முகூர்த்தத்தில் நடந்தன. எனவே ராமர் கோயில்களில் திருமண வைபவம் நடக்கும். (ஸ்காந்த +வால்மீகி ராமாயண கல்யாண சுலோகங்களே மேலே கையாளப் பட்டுள்ளன. திருமணத்துக்காக காத்திருக்கும் ஆணோ- பெண்ணோ அல்லது அவர்களது தாய் - தந்தையரோ மேற்கண்ட சுலோகங்களைச் சொல்லிவந்தால், விரைவில் திருமணம் மங்களகரமாக - அமோகமாக நடக்கும். தம்பதிகள் சுகமாக வாழ்வர் என்பது தத்துவம்.)
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் கொண்ட பங்குனி உத்திரவிழா பழனியில் கோலாகலமாக நடைபெறும்.
பழனி (திருஆவினன்குடி) ஒரு முருகன் தலம். மூன்றாவது படை வீடு என நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரி நாதர் திருப்புகழிலும் பாடிய தலம். பங்குனி உத்திர உற்வசத்தில் (இதுவே பத்து நாள் பெருவிழா) தேர் ஓடும் தலம் பழனி என்று பழைய காவடிச் சிந்து பாடல்கள் கூறுகின்றன.
பாசிப் படர்ந்த மலை முருகையா ஐயா பங்குனித்தேர் ஓடும் மலை முருகையா ஊசிப்படிந்த மலை முருகையா ஐயா உருத்ராக்ஷம் காக்கும் மலை முருகையா மலைக்குள் மலை நடுவே முருகையா ஐயா மலையாள தேசமப்பா முருகையா ஐயா.
இந்தியாவில் அநேகமாய் 365 நாட்களும் பக்தர்கள் கூட்டம் அதிகம் என்றால் அது மூன்று தலங்களையே குறிக்கும்.
வடநாடு - வைஷ்ணவி தேவி மந்திர். ஆந்திரம் - திருப்பதி வெங்கடாசலபதி. தமிழ்நாடு - பழனி.
அதுவே அந்த தல தெய்வ சாந்நித்ய ஈர்ப்பு எனலாம்.
பழனி மலையின் அடிவாரத்துக்கு திருஆவின்குடி என்று பெயர். அழகு முருகன் தனியே மயில்மீது வேலேந்தி அமர்ந்துள்ளான். இது ஒரு காரணப் பெயர்.
திரு-மகாலட்சுமி, ஆ - காமதேனு இனன்- சூரியன், கு - பூமாதேவி, டி - அக்னி ஆகியோர் வழிபட்டதலம். ஆக நாம்அந்த முருகனை வழிபட முருகன் மட்டுமல்லாது இவ்வைவரும் தமது அருளை நமக்குப் பொழிவார்கள். இவர்கள் இங்கு முருகனை வழிபடக் காரணம் என்ன?
ஒருசமயம் மகாவிஷ்ணுவின் கோபத்திற்கு ஆளான ஸ்ரீதேவியும் பூதேவியும் தங்கள் மருமகன் முருகனை வந்து பூஜித்தனர்.
விஸ்வாமித்திரர் படையை வசிஷ்டரிடமிருந்த காமதேனு வென்றது. அதனால் ஏற்பட்ட அகங்கார சாபம் நீங்க காமதேனு இங்கு வந்து வழிபட்டது.
தன்னால்தான் உயிர்கள் அனைத்தும் வாழ்கின்றன என்று ஆணவம் கொண்ட சூரியன் சிவனின் சாபத்துக்கு ஆளானான். அது நீங்க வழிபட்டான்.
தட்சியாகத்தில் வீரபத்ரனால் தண்டிக்கப்பட்ட அக்னி தன் சாபம் தீர வழிபட்டான். இந்த ஐந்து மூர்த்திகளையும் கோயில் பிராகாரத்தில் காணலாம்.
கோயிலுக்கு அருகில் முருகப்பெருமான் தோற்றுவித்த சரவணப்பொய்கை உள்ளது. மலையின் மேற்கே ஷண்முக நதி உள்ளது. மலையின்மீது பழனி தண்டாயுதபாணி (தண்டம் தரித்தவன்) குடியுள்ளான். தலை மொட்டை அல்ல; அபிஷேகம் செய்யும் போது தெரியும் - அவன் ஜடாதாரி. விக்ரகம் கல்லால் ஆனதல்ல; நவபாஷாணத்தால் ஆனது. அதனால்தான் இவரது அபிஷேகப் பிரசாதங்கள் சர்வரோக நிவாரணியாக உள்ளது.
போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது. இந்த நவபாஷாண விக்ரகம். இத்தலத்திற்கே சித்தகிரி, சித்தர் வாழ்வு (ஔவையார் கூறியது), வித்தன்குடி என்றும் பெயர் உண்டு.
பொதினி என்று அகநாநூற்றுப் பெயர் பழனியாயிற்று. தமிழ்நாட்டு வேட்கோவர் வகுப்பைச் சேர்ந்தவர் போகர் சர்வ சாத்திரங்களையும் கற்றுத் துறை போகியவர். எனவே போகர் என்பது காரணப் பெயராக அமைந்தது. காலாங்கி முனிவரின் தலைமை மாணாக்கர் இவர். காயசித்தி பெற்றவர்.
பல மொழிகள் அறிந்தவர். வைத்ய யோக முறைகளுக்கு 1,700 பாடல்களில் ஒரு நிகண்டு செய்தவர். சீனா, இலங்கை (கதிர்காமம்) சென்று பழனிக்குத் திரும்பியவர் போகர். இவரது சமாதி கோயிலில் உள்ளது. அவர் பூஜித்த புவனேஸ்வரி மரகத லிங்கத்தையும் அங்கு காணலாம். அங்கிருந்து ஆண்டவன் சன்னிதிக்கு சுரங்கம் இருப்பதாகவும், அதன் வழியே சென்று முருகனுடன் கலந்தார் என்றும் சொல்வர்.