ஈஸ்வரனின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு படிப்பினை இருக்கும். மாயை என்பதையும், ஈஸ்வர காரியம் என்பதையும் ஈஸ்வர பக்திமூலம் தெரிந்துகொள்ளவேண்டும். நடக்கும் எந்த ஒரு நிகழ்வும் சிவனது நாடகத்தில் ஒரு காட்சிதான். பொழுதுபோக்கு விஷயங்களை மட்டும் படிக்காமல் நமது இந்துமதப் புராணங்களைப் படிக்கவேண்டும். அப்போதுதான் உண்மை விளங்கும்.
பரம்பொருளான சிவபெருமானின் திருவிளையாடல் புராணத்தை அற்புதமாக நமக்கு பெரும்பற்றப் புலியூராரும், பரஞ்சோதி முனிவரும் ஆழ்ந்த சிவபக்தியோடு தந்திருக்கிறார்கள். தன்மீது பக்தி செலுத்தும் அடியார்களின் பக்தியை வெளியுலகிற்குக் காட்ட, எங்கும் நிறைந்த சிவன் மதுரை மாநகரில் பல திருவிளையாடல்களைப் புரிந்துள்ளார். ஒரு சமயம் வைகை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இருபுறமும் கரைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் தொடங்கின. இரண்டு கரைகளிலும் மண்ணை நிரப்பி வலிமைப்படுத்த கட்டளையிட்டான். பாண்டிய மன்னன் வீட்டுக்கொருவர் கட்டாயமாக வந்து இந்தப் பணியில் ஈடுபட வேண்டுமென்பது மன்னன் ஆணை. மதுரையிலே ஒரு பகுதியில் மூதாட்டி ஒருத்தி அன்றாடம் சொக்கநாதனை மனநிறைவோடு பூஜித்துவந்தாள். அந்த மூதாட்டி பிட்டு செய்து விற்பதன்மூலம் தன் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தாள். இந்த மூதாட்டிற்கு உற்றார். உறவினர் எவருமில்லை பெற்றெடுத்த பிள்ளைகளும் இல்லை. கட்டிக்கொண்ட கணவனும் காலமாகிவிட்டான். வீட்டுக்கொரு ஆள் வரவேண்டுமென்ற அரச கட்டளை இந்த மூதாட்டிக்கும் வந்தது. வயதாகிப்போனதால் வலிமை போய் விட்டது. என்ன செய்வதென்று புரியாமல் தவித்தாள் அந்த மூதாட்டி.
பரமேஸ்வரா! சொக்கநாதப் பெருமானே! இந்த இக்கட்டான சூழ்நிலையில் நான் என்ன செய்வேன். எனக்கு ஒரு வழிகாட்டு என்று பிரார்த்தனை செய்தாள். அன்று காலை எங்கிருந்தோ ஒருவன் வந்தான். அழுக்கேறிப் போன கந்தல் உடை அணிந்திருந்தான். எண்ணெயே இல்லாத பரட்டைத்தலை தோளிலே ஒரு மண்வெட்டி, தலையிலே ஒரு கூடை சகிதமாய் மூதாட்டி முன்வந்து நின்றான். பாட்டி நான் கூலிவேலை செய்பவன் இந்தப் பக்கம் ஏதாவது வேலை இருக்கிறதா? என்று கேட்டான். அவனைப் பார்த்ததும் மூதாட்டிக்கு ஒரே மகிழ்ச்சி இந்த வைகைக்கரைக்கு மண் அள்ளிக்கொட்ட வேண்டிய வேலை என் சார்பாக வேலை செய்ய யாருமில்லை. ஈஸ்வரன், புண்ணியத்தில் நீ வந்திருக்கிறாய் எனக்காக நீ அந்த வேலையைச் செய்வாயா? என்று கேட்டாள் மூதாட்டி.
ஓ அருமையாகச் செய்துதருகிறேன். கூலி என்ன தருவாய்? என்று கேட்டான். பிட்டு விற்றுப் பிழைக்கும் நான் என்ன கூலியப்பா தரமுடியும்? இதே இந்த பிட்டு இருக்கே, அதைக் கொடு போதும். இப்பொழுதுதான் பிட்டை அடுப்பில் வைத்தேன். அது வேக கொஞ்ச நேரமாகும். என்று சொல்லிக்கொண்டே ஏற்கெனவே பிட்டை எடுக்கும்போது உதிர்ந்து கிடந்தை ஒன்றாகச் சேர்த்து உருட்டி ஒருபிட்டு போல செய்து இலையில் வைத்துக்கொடுத்தாள். கிடைத்தது போதுமென்று தின்று தீர்த்த அந்த கூலி வேலைக்காரன், பாட்டி எனக்கு ரொம்ப திருப்தி என்று சொன்னான். அப்படியா சரி வா என்று மூதாட்டி அந்தக் கூலிக்காரனை மண்நிரப்ப வேண்டிய இடத்திற்கு அழைத்துச்சென்று இதோ இந்தக் கரையில்தான் மண் நிரப்ப வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட இடத்தைக் காட்டினாள். கூலிக்காரனும் சரி பாட்டி, இந்த இடத்தில் நான் நிரப்பிவிடுகிறேன். நீங்கள் போங்கள் என்று கூறினான்.
ஆற்றுப்படுக்கையில் நடைபெறும் மண் நிரப்பும் வேலையை மேற்பார்வையிட்டபடி வந்துகொண்டிருந்தான். பாண்டிய மன்னன். ஒரு சில இடங்களிலே சில குறைபாடுகளைக் கண்டு அதை சரி செய்யும்படி அறிவுறுத்திக் கொண்டே வந்த மன்னனின் கண்களில் ஒரு குறிப்பிட்ட இடம் மண் நிரப்பப்படாமல் இருந்தது தென்பட்டது. அதைக்கண்ட மன்னன் கடுங்கோபம் கொண்டு, என்ன காரணம் என்று விசாரித்தான். அது மூதாட்டிக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்று சேவர்கள் சொல்ல, அந்த மூதாட்டியை உடனே வரவழைக்கும்படி ஆணையிட்டான். கொஞ்ச நேரத்தில் அந்த மூதாட்டியை அரசன்முன் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அந்த மூதாட்டி கூலியாள் ஒருவனை நியமித்த கதையை ஆரம்பம் முதல் கடைசி வரை சொல்லிமுடித்தாள்.
எங்கே அந்தக் கூலிக்காரன்? அதட்டினான் அரசன். இங்கேதான் இருந்தான். எங்கு போனானோ தெரியவில்லை. எதற்கும் தேடிப்பார்த்து வருகிறேன். என்று சொல்லி விட்டு அந்தக் கூலிக்காரனைத் தேடிப்போனாள் மூதாட்டி. ஆற்றங்கரையோரம் சுகமான தென்றல் வீச, ஓர் அரச மரத்தடியில் தன்னை மறந்து படுத்து உறங்கிக்கொண்டிருந்தான் அந்தக் கூலிக்காரன். இதைக்கண்ட மூதாட்டி அரசனிடம் சொல்ல, வந்து பார்த்த அரசனுக்கு மிகக் கோபம் வந்தது. கூலியாளின் முதுகில் தனது கையிலிருந்த பிரம்பால் அடித்தான். பாண்டிய மன்னன். அடுத்த நொடி அந்த பிரம்படி சுளீர் என்று பாண்டியன் மன்னன் முதுகில் பட்டது. அரசன் முதுகில் மட்டுமாபட்டது? அருகிலிருந்த ஆட்களின் முதுகிலும் மதுரை வாழ் மக்கள் அனைவர் முதுகிலும் விழுந்தது. அனைவரும் அலறினார்கள். அடுத்த நொடி அந்தக் கூலிக்காரனும் மாயமாய் மறைந்துபோனான். வியந்துபோன அரசனும் மற்றவர்களும் செய்வதறியாது அந்த இடத்தைவிட்டு அகன்றனர்.
அன்றிரவு வரகுண பாண்டிய மன்னனின் கனவில் கந்தரேஸ்வரர் தோன்றி, பாண்டியா, வலுவிழந்த மூதாட்டியை பணிசெய்யச் சொன்னது மனிதாபிமானமற்ற செயல். அவள் என் பக்தை அவளுக்கு உதவி செய்யும் பொருட்டே நாம் கூலிக்காரனாக வந்தோம். அரசனாகிய நீ அரச தர்மத்தைக் கடைப்பிடி என்று கூறி மறைந்தார். இந்த திருவிளையாடல்மூலம் மக்களாகிய நமக்கு அந்த பரமேஸ்வரன் காட்டும் நல்வழியைத்தான் ஆராயவேண்டும்.
வயது முதிர்ந்த பெண்மணியை மண்வாரி போடச் சொன்னது அரசனின் தர்மமாகாது. நாட்டில் நடக்கும் ஒவ்வொரு செயலிலும் அந்த நாட்டு அரசனின் முழு ஈடுபாடும் நேரிடையாக இருக்கவேண்டும் அப்போதுதான் மக்களுக்கு எந்தக் குறைபாடும் இருக்காது. ஒரு நாட்டு அரசன் எத்தனையோ நற்செயல் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த ஆணையிட்டாலும் அவையெல்லாம் சரிவர நடக்கின்றனவா-மக்களுக்கு சரியாகப் போய்ச் சேருகிறதா என்பதை நேரில் சென்று பார்வையிடவேண்டும். அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் ஒப்படைத்துவிட்டு கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. அமைச்சர்களும் அதிகாரிகளும் அவர்களுக்குக் கீழ் உள்ளவர்களிடம் ஒப்படைத்துவிடுகின்றனர். யாரும் நேரில் சென்று பார்ப்பதில்லை. மேலதிகாரிகள், அமைச்சர்கள், அரசன் என அனைவரும் முனைந்தால்தான் வேலை முழுமைபெறும் அரசன் வந்ததால்தான் உறங்கிக் கொண்டிருந்த கூலியாள் பிடிபட்டான். இல்லையென்றால் அந்த வேலை நடந்திருக்காது.
அடுத்து எந்தக் கடமையைச் செய்தாலும் சரிவர செய்யவேண்டும். உண்டு உண்டு வீட்டிலும் வெளியிலும் உறங்கிக் கொண்டிருக்கக்கூடாது. எந்த வேலையும் செய்யாமல் காலம் கழிப்பது கூடாது. ஒப்புக்கொண்ட வேலையை சரியாகச் செய்துமுடிக்கவேண்டும். அதில் குறை வைக்கக்கூடாது. மேற்சொன்ன கருத்துக்களை எடுத்துக்காட்டவே இந்த திருவிளையாடலை ஈஸ்வரன் நடத்திக்காட்டியிருக்கிறான். சிலர் கேட்கிறார்கள், ஈஸ்வரன் வாங்கிய பிரம்படி மட்டும் எல்லார் முதுகிலும் விழுந்ததே! ஏன் அவர் வாங்கி சாப்பிட்ட பிட்டு மட்டும் எல்லார் வயிற்றையும் நிரப்பவில்லை என்று. இதை ஈஸ்வர பக்திமூலம்தான் தெரிந்து கொள்ளமுடியும். சிவன் வாங்கி சாப்பிட்டது பிரம்மம். பிரம்மத்துக்கு வேலை கிடையாது. அதாவது இதை மாயை என்று கூறுவார்கள். அவர் தனக்குத்தானே கேட்டு வாங்கி சாப்பிட்டது அதனால் அது அவர் வயிற்றை மட்டுமே நிரப்பியது. அது அவர் செயல். ஆனால் பிரம்படி அப்படியல்ல. அது அடுத்தவன் செய்தது. எங்கும் எதிலும் பரவியிருக்கும் பரமேஸ்வரன்மீது அந்த அடிப்பட்டதால், அது மாயையிலிருந்து விடுபட்டு அனுக்ரகம் என்பதாகிறது. அதாவது நாம் செய்யும் தவறை நமக்குச் சுட்டிக்காட்டி, நேர்மை என்ற அனுக்ரகத்தை ஈஸ்வரலயமாக்கிவிடுகிறார். வாங்கிச் சாப்பிட்டது செயல் அடிபட்டது புத்தி புகட்டுவது அதாவது சொன்னதொன்று செய்ததொன்று என் இருக்காதே! சொன்னது சொன்னபடி நட என்பதேயாகும்.