பதிவு செய்த நாள்
04
ஏப்
2016
12:04
சென்னை: மத்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அருங்காட்சியகம் மற்றும் புராதன சின்னங்களுக்கான நுழைவு கட்டணம், மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை யில், அருங்காட்சியகம் உள்ளது. இது, மத்திய தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள அரிய பொருட்களை பார்வையிட, நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவரை, நுழைவு கட்டணமாக, இந்தியராக இருந்தால், நபர் ஒருவருக்கு ஐந்து ரூபாய்; வெளி நாட்டினராக இருந்தால், 100 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இத்தொகை தற்போது, முறையே, 15 ரூபாய் மற்றும், 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு நுழைவு கட்டணம் கிடையாது. கல்வி சுற்றுலா வரும் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. புதிய கட்டணம், நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்து உள்ளது. இந்த கட்டண உயர்வு, நாடு முழுவதும் உள்ள, அருங்காட்சிகங்கள் மற்றும் புராதன சின்னங்களுக்கும் அமலுக்கு வந்துள்ளது.
மாமல்லபுரத்திலும்...: தமிழகத்தில், மாமல்லபுரம், செஞ்சி, திண்டுக்கல், சித்தன்னவாசல் ஆகிய, நான்கு பகுதிகளில் உள்ள பாரம்பரிய நினைவு சின்னங்களை காண ஏராளமானோர் வருகின்றனர். இதில், சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில், பார்வையாளர் நுழைவு கட்டணமாக, இந்தியருக்கு, தலா, 10 ரூபாய்; வெளிநாட்டு பயணிகளுக்கு, தலா, 250 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. அந்த கட்டணங்கள், முறையே, 30 ரூபாய் மற்றும், 500 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. பிற இடங்களில், இந்தியருக்கு, தலா, 15 ரூபாய்; வெளிநாட்டவருக்கு, தலா, 200 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.