பதிவு செய்த நாள்
07
ஏப்
2016
11:04
ஈரோடு: ஈரோடு செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் விழாவில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியபடி, குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு, முனிசிபல் சத்திரம் பகுதியில் எழுந்தருளியிருக்கும் செல்லாண்டியம்மன் கோவிலின், 23ம் ஆண்டு குண்டம் திருவிழா மார்ச், 22ம் தேதி தொடங்கியது. நேற்று குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. காப்பு கட்டி விரதம் இருந்த நூற்றுக்காணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். கோவில் வளாகத்தில், 20 அடி நீளத்தில் அக்னி குண்டம் தயார் படுத்தப்பட்டு, குண்டத்தின் முகப்பில் பால் தொட்டியும், முடிவில் நீர்த்தொட்டியும் அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் முதலில் பால் தொட்டியில் குண்டம் இறங்கினர். ஆண்கள் பெண்கள், குழந்தைகள் என பலர் குண்டம் இறங்கினர். வேல், காவடி, அலகு குத்தி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது.