பதிவு செய்த நாள்
08
ஏப்
2016
11:04
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள உஞ்சனை ஸ்ரீசவுந்திரநாயகி சமேதஸ்ரீ திருபுவன சக்கரவர்த்தீஸ்வரர் கோயில் 12 ம் நுாற்றாண்டிற்கு முன் கட்டப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லுாரி பேராசிரியர் கணேசன்,ஆசிரியர்கள், மாணவர்கள் குழு, தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சித்துறை முன்னாள் துணை இயக்குனர் சாந்தலிங்கம் தலைமையில் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களை கடந்த 5 தினங்களாக ஆய்வு செய்து வருகின்றனர். கல்வெட்டுக்களில் குறிப்பிட்டுள்ளது பற்றி முன்னாள் துணை இயக்குனர் சாந்தலிங்கம் கூறியதாவது, 12ம் நுாற்றாண்டில் சுந்தரபாண்டியன் காலத்தில் எழுதப்பட்டவையாக உள்ளன. பெரும்பாலும் நிலத்தானம், படித்தளம் சம்பந்தமாகவே உள்ளது. தற்போது உஞ்சனை என்று அழைக்கப்படும் இந்த கிராமம் அந்த காலத்தில் உஞ்சேனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு கல்வெட்டில் கேரள சிங்க வளநாட்டு பெரும்பூர் நாட்டு ஊஞ்சேனை உடையார் தானத்தார்வ மாளவ சக்கரவர்த்தி ஈஸ்வர முடையார் நாயனார் கோயில் பிடிபாட பரிசு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டுக்கள் பற்றி 1980-81ல் மத்திய அரசு ஆய்வில் சில குறிப்புக்களை மட்டும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளது. அந்த காலத்தில் தாலுகா அலுவலகம்,கருவூலம் போல் கோயில்கள் செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது, என தெரிவித்தார்.
பேராசிரியர் கணேசன் கூறுகையில், உஞ்சனையை தொடர்ந்து கண்டதேவி, அரியக்குடி கோயில்களில் உள்ள கல்வெட்டுக்கள் பற்றி ஆய்வு செய்ய உள்ளோம். அனைத்து செய்திகளையும் ஆய்வு செய்து கட்டுரை சமர்பித்து, எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் புத்தகமாக வெளியிடவுள்ளோம், என்றார்.