பதிவு செய்த நாள்
16
ஏப்
2016
11:04
திருவண்ணாமலை: செய்யாறு, ஹனுமன் ஸமேத விஜய கோதண்டராமர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த, கொட நகரில், ஸம்பாதி குளக்கரையில், ஸம்பாதி குடும்பத்தினரால், கடந்த, 380 ஆண்டுகளுக்கு முன், பாதுகாஸேவக ஹனுமன் கோவில் கட்டப்பட்டு, நித்ய பூஜை நடத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து, கடந்த, 1917, ஆவணி, திருவோண நட்சத்திரத்தில், சீதா, லஷ்மண, ஸம்பாதி, ஹனுமன் ஸமேத விஜய கோதண்டராமர் கோவில் கட்டப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி அன்று, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று, 98ம் ஆண்டு ராமநவமியை முன்னிட்டு, சீதா, லஷ்மண, ஸம்பாதி, ஹனுமன் சமேத விஜய கோதண்டராமர், ஹயக்ரீவர் லஷ்மி நரசிம்மர், லஷ்மி வராகர், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, பாச்சாரத்ர ஆகமக ராஜம் பட்டரால், திருமஞ்சனம், விஷ்ணு ஸஹஸ்ரநாம, சுதர்சன, மகாலஷ்மி, தன்வந்திரி ஹோமம் நடத்தப்பட்டு, சீதாராம திருக்கல்யாண மகோத்சவம் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை, கே.எஸ்.ராமபத்ரன், கே.எஸ்.என்.ராமன் ஆகியோர் செய்திருந்தனர்.