பதிவு செய்த நாள்
19
ஏப்
2016
12:04
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருத்தேர் உள்ளிட்ட பஞ்சரத வீதியுலா நேற்று கோலாகலமாக நடந்தது. திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவில், சித்திரை பிரம்மோற்சவ விழா, 12ம் தேதி துவங்கி, தினமும் பல்வேறு உற்சவங்களுடன் நடந்து வருகிறது. 14ம் தேதி, முக்கிய உற்சவமான, நாயன்மார்கள் மலைவலம் நடந்தது. அதைத்தொடர்ந்து, மற்றொரு முக்கிய உற்சவமான பஞ்சரத வீதியுலா, நேற்று நடந்தது. காலை 6:15 மணிக்கு, முதலில், விநாயகர் தேரில் புறப்பட, அவரைத் தொடர்ந்து, வேதகிரீஸ்வரர் தேரில் புறப்பட்டார். புல்டோசர் இயந்திரம் மூலம் நிலையிலிருந்து இழுக்கப்பட்ட தேரை, பக்தர்கள், ஓம் நமசிவாய என, முழங்கி வடம்பிடித்து இழுத்தனர். சுவாமி தேரை தொடர்ந்து, திரிபுரசுந்தரி அம்மன், முருகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள், தனித்தனி தேரில் சென்றனர். கவரை தெரு, கருங்குழி சாலை, பெரிய தெரு, கம்மாளர் தெரு வழியாக சென்ற தேர்கள், பகல், 1:00 மணிக்கு நிலையை அடைந்தன.விழாவில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.