பதிவு செய்த நாள்
23
ஏப்
2016
12:04
குன்னுார்: குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில், 71வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. குன்னுார் தந்திமாரியம்மன் கோவி லில், ஆண்டு தோறும் நடந்து வரும் சித்திரை தேர் திருவிழா முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான முத்துப்பல்லக்கு நிகழச்சி நேற்று நடந்தது. தந்தி மாரியம்மன் கேரள சேவா சங்கம் சார்பில், 71வது ஆண்டாக நடக்கும், இந்த திருவிழாவில், வி.பி.,தெருவில் உள்ள துருவம்மன் கோவிலில் இருந்து துவங்கியது. பின்பு, கும்பகலசம், பஞ்சவாத்தியம், பூக்காவடி, அம்பலவயல் காவடி, சிங்காரமேளம், மற்றும் முத்துரத காளை ஊர்வலம் வீதிகளின் வழியாக வந்து, தந்திமாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கு, 108 குடம் பசும்பால், 108 இளநீர் மற்றும் அனைத்து அபிஷேக பொருட்கள் கொண்டு தந்திமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஐயப்பன் கோவில் அருகே அன்னதானம் நடந்தது. இதில், வி.பி.,தெருவில் வைக்கப்பட்ட, பிரமாண்ட டிராகன் உருவம் பக்தர்களை கவர்ந்தது. தொடர்ந்து, மகா சக்தி அம்மனின் ரத ஊர்வலம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.