காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவத்தில், நேற்று கருட சேவை உற்சவம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் உள்ள வைணவ கோவில்களில் சிறப்பு பெற்று விளங்கும் அஷ்டபுஜ பெருமாள் கோவில் பிரமோற்சவம், கடந்த வெள்ளி கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் காலை சப்பரம் வாகனத்திலும், இரவில் சிம்ம வாகனத்திலும், இரண்டாம் நாள் காலை, ஹம்ச வாகனத்திலும் இரவு சூர்யபிரபை வாகனத்திலும் பெருமாள் வீதிவுலா நடைபெற்றது. நேற்று மூன்றாம் நாள், காலை, 6:00 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். திருக்கச்சி நம்பி தெரு வழியாக வரதராஜ பெருமாள் கோவில் வரை சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து திரும்பி வந்தார். மே நான்காம் தேதி காலை விடையாற்றி உற்சவமும், இரவு புஷ்ப பல்லக்கு வாகனத்தில் வீதிவுலாவுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.