பதிவு செய்த நாள்
25
ஏப்
2016
12:04
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில், பெருமாள் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கினார். ஏப்., 22 அதிகாலை 3.35 மணிக்கு பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் கருநீலப் பட்டுடுத்தி இறங்கிய கள்ளழகர், மறுநாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சியடித்து வரவேற்றனர். நேற்று முன்தினம் காக்காதோப்பு பெருமாள் கோயிலில் இருந்து சேஷ வாகனத்தில் அழகர் புறப்பட்டார். மட்டா மண்டகப்படியில் இரவு 8 மணிக்கு, மண்டூக(தவளை உருவம்) மகரிஷிக்கு, துர்வாச முனிவரால் ஏற்பட்ட சாபத்தை நீக்கி விமோசனம் அளித்தார். தொடர்ந்து, வாணியர் மண்டகப்படி நடந்தது. இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பெருமாள், அர்ச்ச, மச்ச, கூர்ம, கிருஷ்ண, வாமன, ராம, பரசுராம, பலராம, மோகினி அவதாரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் விடிய, விடிய பெருமாளை தரிசித்து பரவசமடைந்தனர். நேற்று இரவு மட்டா மண்டகப்படியில் கருட வாகனத்திலும், இன்று கிரி மண்டகப்படியில் ராஜாங்க திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். நாளை காலை 7 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன், புஷ்பப்பல்லக்கில் வீதிவலம் வருகிறார்.