பதிவு செய்த நாள்
05
மே
2016
12:05
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், சரியான பாதுகாப்பு வசதி இல்லாததால் பக்தர்களின் பொருட்கள், திருட்டு போவதாக பக்தர்கள் புலம்புகின்றனர். கரூர் மாவட்டத்தில், ஆயிரம் ஆண்டுகளை கடந்த கோவிலாக கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. பிரதோஷம் மற்றும் விசேஷ நாட்கள் மட்டுமின்றி, தினசரி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கோவில் உள்ளது. கோவிலில் சரியான பாதுகாப்பு வசதி இல்லாததால், பக்தர்களின் பொருட்கள் திருட்டு போவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: பசுபதீஸ்வரர் கோவிலுக்கு தினமும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சில பக்தர்கள், கோவில் வளாகத்தில் தங்களது செருப்பு மற்றும் உடமைகளை தங்களது வாகனம் அருகில் வைத்து செல்கின்றனர். இதை நோட்டமிடும் சமூக விரோத கும்பல், பொருட்களை திருடிச் சென்று விடுகின்றன. கடந்த வாரத்தில் பெண் பக்தர்கள் வைத்திருந்த பேக் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக, போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பக்தர்களின் வசதிக்காக போதிய பாதுகாப்பு வசதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.